எல்லையோர மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை!: டில்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததை அடுத்து, எல்லையோர மாநிலங்களின் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். நேற்று நடந்த தாக்குதல் குறித்து விளக்குவதற்காக, டில்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டத்தையும் மத்திய அரசு கூட்டியுள்ளது.

பயங்கரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை அடுத்து, எல்லையோர மாநிலங்களில் நிலவும் புதிய சூழ்நிலையின் தாக்கம், டில்லியின் அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களிலும் ஏற்பட்டுஉள்ளது.

ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு, மத்திய அமைச்சரவை கூட்டம், வெளியுறவு செயலர் மற்றும் அதிகாரிகளின் பேட்டி, உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அடுத்தடுத்த ஆலோசனைகள் என, டில்லியே பரபரத்த வண்ணம் உள்ளது.

மேலும், எல்லைப் பகுதி மாநில முதல்வர்கள், டி.ஜி.பி.,க்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோருடன், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசனையும் நடந்தது.

இந்த பரபரப்பான சூழலில், மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இன்று காலை, 11:00 மணிக்கு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள நுாலக கட்டடத்தின் அறை எண் ஜி - 074ல் இந்த கூட்டம் நடக்கவுள்ளது.

தாக்குதல் விபரங்கள்



அரசு தரப்பில் இருந்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

முதல் கூட்டத்தைப்போலவே மிகக்குறைந்த கால அவகாசத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நேரடியாகவே பார்லிமென்ட் அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சூழ்நிலையின் முக்கியத்துவம் கருதி அனைவரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதல் குறித்த விபரங்களை, அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு விரிவாக விளக்குவதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம்.

மேலும், பதிலடி தாக்குதலுக்குப் பின் எழுந்துள்ள, புதிதான, பதற்றமான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது, அதற்குண்டான மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் அதுகுறித்து விபரங்களும் இந்த கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிகிறது.

முக்கிய ஆலோசனை



இதுதவிர, தேசிய பாதுகாப்பு குறித்து அனைத்துக்கட்சி அரசியல் தலைவர்களிடமிருந்தும் முக்கிய ஆலோசனைகளை கேட்டு பெறுவதோடு, இந்த பதற்றமான சூழலில் ஒட்டுமொத்த நாடும், மத்திய அரசு மற்றும் இந்திய ராணுவம் ஆகிய இரண்டு தரப்பும் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு தரும்படியும் கேட்டுக் கொள்ளப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.



'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நம் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருநாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு, பதான்கோட், ஸ்ரீநகர், லே, ராஜஸ்தானின் ஜோத்பூர், ஜெய்சல்மார், ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா, தர்மசாலா, குஜராத்தின் ஜாம்நகர் உள்ளிட்ட முக்கிய வடக்கு மற்றும் மேற்கு விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. 'ஏர் - இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர்' மற்றும் பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன.அதிகாரிகளின் உத்தரவுகளை தொடர்ந்து, மே 10ம் தேதி காலை 5:29 மணி வரை ஸ்ரீநகர், ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம் நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் விமானங்களை நிறுத்தி வைப்பதாக, 'ஏர் - இந்தியா' தெரிவித்து உள்ளது. 'இண்டிகோ' மட்டும் 165 விமானங்களை ரத்து செய்தது. 'ஆகாசா ஏர்' ஸ்ரீநகர் விமானங்கள் அனைத்தையும் ரத்து செய்தது. 'ஸ்டார் ஏர் நான்டெட்' நிறுவனம், ஹிண்டன், ஆதம்பூர், கிஷன்கர் மற்றும் புஜ் ஆகிய இடங்களுக்கு விமான சேவைகளை ரத்து செய்தது.அமிர்தசரஸ், ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் ஹிண்டன் ஆகிய இடங்களுக்கான விமான சேவை, ரத்து செய்யப்பட்டதாக, காலக்கெடு குறிப்பிடாமல், 'ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக, 'கத்தார் ஏர்வேஸ்' நிறுவனமும் பாகிஸ்தானுக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.முன்பதிவு செய்துள்ள பயணியருக்கு, கட்டணம் திருப்பித் தரப்படும் அல்லது மாற்று ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.




பிரதமர் வெளிநாடு பயணம் ரத்து

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று இந்திய ராணுவம் 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை வெடிகுண்டுகள் வீசி தாக்கி அழித்தது. இதையடுத்து இரு நாடுகளிலும் பதற்றம் நிலவுவதை அடுத்து ஐரோப்பாவின் குரேஷியா, நார்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்த மாத மத்தியில் செல்ல இருந்த பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். பயணம் ரத்து தொடர்பாக அதிகாரப்பூர்வ காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. முன்னதாக, ரஷ்யாவில் பிரதமர் மோடி இன்று மேற்கொள்ள இருந்த ரஷ்ய பயணத்தை ரத்து செய்தார்.




- நமது டில்லி நிருபர் -

Advertisement