பெருநகர் நெடுஞ்சாலையில் மைய தடுப்பு பணி மும்முரம்

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் --- வந்தவாசி நெடுஞ்சாலை 40 கி.மீ., உடையது. இந்த சாலையை பயன்படுத்தி தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

மாங்கால் சிப்காட், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட், ஒரகடம் சிப்காட் செல்லும் வாகனங்களும் இந்த சாலை வழியே செல்கின்றன.

இரு வழியாக சாலையாக உள்ள இச்சாலையில் போதிய இட வசதி இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.

இதனால், நான்கு வழிச் சாலையாக மாற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, மாங்கால் கூட்டு சாலை முதல் மானாம்பதி கூட்டு சாலை வரை 9 கி.மீ., நான்கு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலை துறையினர் திட்ட மிட்டனர்.

இதற்காக, முதல் கட்டமாக 78.8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் துவக்கப்பட்டது. தொடர்ந்து, மாங்கால் கூட்டுசாலை முதல் பெருநகர் வரை புதிதாக 6 சிறு பாலங்கள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெருநகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் மைய தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Advertisement