அம்மன் கோவில் குளக்கரை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

படப்பை:குன்றத்துார் ஒன்றியம் படப்பை ஊராட்சி ஆதனஞ்சேரி கிராமத்தில் வடுகாத்தை அம்மன் கோவில் குளம் உள்ளது. இக்குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.

தற்போது இந்த குளம் பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. குளக்கரை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

குளக்கரையில் இறந்தவர்களுக்கு காரியம் செய்யும் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தையும் அதன் அருகே உள்ள குளக்கரையையும் தனி நபர்கள் மாட்டுச்சாணம் வரட்டி தட்டி ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இதனால், இறந்தவர்களுக்கு காரியம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்த குளத்தை சுற்றி அண்ணா நகர், காமாட்சி நகர், சி.ஐ.டி.,நகர், ராகவேந்திராபுரம், ஆதனஞ்சேரி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 3,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் பொழுது போக்கு அம்சம் இல்லை.

எனவே, இந்த குளத்தை துார்வாரி சீரமைத்து, குளக்கரையை சுற்றி நடைபாதை அமைத்தால், பொதுமக்கள் நடைபயிற்சி சென்று பயனடைவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement