எந்த இடையூறும் கூடாது: அன்புமணி அறிவுறுத்தல்

சென்னை : 'மாமல்லபுரத்தில் நாளை நடக்க உள்ள சித்திரை முழுநிலவு மாநாட்டில், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல், பா.ம.க., தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்' என, அக்கட்சி தலைவர் அன்புமணி அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நாளை நடக்க உள்ளது. இதற்கு, பா.ம.க., தொண்டர்கள் பத்திரமாக வந்து, பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்.

மாநாட்டிற்கு வருவோர் அமைதியாக, பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும், எந்த இடையூறும் இல்லாமல், கட்டுப்பாட்டுடன் வர வேண்டும்; அவ்வாறே திரும்பி செல்ல வேண்டும். காவல்துறை என்ன சொல்கிறதோ, அதை கேட்டு நடக்க வேண்டும். இடையில் சிறு சலசலப்புகள், பிரச்னை வந்தாலும் அதை கண்டுகொள்ள வேண்டாம்.

யாராவது சீண்டினாலும், பா.ம.க., தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும். மாநாடு வெற்றி பெற்றால் தான், சமூக நீதியை வென்றெடுக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement