கோடையில் கம்பு நடவு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை

வீரபாண்டி, மே 8

வீரபாண்டி வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை:குறைந்த நீரிலும் செழித்து வளரக்கூடிய கம்பை, தற்போது கோடையில் விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெறலாம். உயர் விளைச்சல் ரகங்களான கோ -10, தனசக்தி மற்றும் வீரிய ஒட்டுரக கோ 9 விதைகளை வாங்கி பயன்படுத்தலாம்.


ஹெக்டேருக்கு, 5 கிலோ விதைக்கு ஒரு கிலோ உப்பை, 10 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்.
அடியில் தங்கிய விதைகளை, 4 முறை கழுவி நிழலில் உலர்த்தி பூஞ்சாண வித்து இல்லாமல் விதைகளை தேர்ந்தெடுத்து, அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா தலா, 600 கிராம் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைகளை, 2 சதவீத பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சதவீத சோடியம் குளோரைடில், 16 மணி நேரம் ஊற வைத்த பின், 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைத்தால் முளைப்புத்திறன் அதிகரிக்கும். 12.5 கிலோ நுண்ணுாட்ட கலவையை மண்ணுடன் கலந்து, 50 கிலோவாக மாற்றி விதைப்பதற்கு முன்னும் பின்னும் விதைகளை மூடும் விதமாக அளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு தழைச்சத்து, 80 கிலோ, மணிச்சத்து, 40 கிலோ மற்றும் சாம்பல் சத்து, 40 கிலோ ஆகிய உரங்களை இட வேண்டும்.

Advertisement