கபடி போட்டி தமிழக அணிக்கு கடலுார் மாணவி தேர்வு

கடலுார: கடலுாரைச் சேர்ந்த மாணவி, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்போட்டியில் தமிழக கபடி அணியில் இடம்பிடித்துள்ளார்.

கடலுார் அடுத்த ஒதியடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம், இளநீர் வியாபாரி. இவரது மகள் சபிதா,17. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை கடலுார் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். தற்போது காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.சி.ஏ.,படிக்கிறார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் காஞ்சிபுரம் எக்சலன்ஸில், பயிற்சியாளர் நதியாவின் மேற்பார்வையில் பயிற்சி பெறுகிறார். இவர் பீகார் மாநிலம் ராஜ்கிர்ரில் நடக்கும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் தமிழக கபடி அணியில் இடம்பிடித்து விளையாடுகிறார். மேலும் தமிழக பெண்கள் அணிக்கான பீச் கபடி அணியிலும் இடம்பிடித்துள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து, திறமையின் மூலம் தமிழக அணியில் பங்கேற்று விளையாடும் மாணவி, அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்றுவருகிறார்.

Advertisement