மனித - விலங்கு மோதலை தடுக்க ஏ.ஐ., உதவியுடன் திட்டம்: கூடலுாரில் வனத்துறை அமல்

2

சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலுாரில், மனித - விலங்கு மோதலை தடுக்க, ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில், புதிய திட்டத்தை வனத்துறை அமல்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், வன உயிரின பாதுகாப்புக்கு, வனத்துறை வாயிலாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள், வேட்டையாடப்படுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முடிவு



கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில், ரயிலில் சிக்கி யானைகள் இறப்பது, பெரிய பிரச்னையாக உருவெடுத்தது.

இதைத்தடுக்க, அந்த வழித்தடத்தில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான திட்டம், கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

அதன்பின், அந்த வழித்தடத்தில், 2,000 முறைக்கு மேல், யானைகள் பாதுகாப்பாக ரயில் பாதையை கடந்து சென்றுள்ளன.

கோவையில் இத்திட்டம் வெற்றி அடைந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில், மனித - விலங்கு மோதலை தடுக்க, புதிய திட்டத்தை அமல்படுத்த வனத்துறை முடிவு செய்தது.

அதிகரிப்பு



நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, கூடலுார் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 3,000 அடி உயரத்தில் இருப்பதால், இங்கு அதிக வெயில், அதிக குளிர் இல்லாமல், இதமான காலநிலை நிலவும்.

தற்போது, இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ள கூடலுாரில், வனப்பகுதியில் இருந்து யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வருவது அதிகரித்துஉள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், 20க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துஉள்ளன.

இதனால், மனிதர்களால் புலிகள், யானைகள் கொல்லப்படுவதும், யானைகளால் மனிதர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.

இங்கு, மனித - விலங்கு மோதலை தடுக்க, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

12 இடங்கள்



இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நீலகிரி மாவட்டம் கூடலுாரில், ஒவ்வொரு ஆண்டும், ஊருக்குள் நுழையும் விலங்குகளை தடுப்பது சவாலாக அமைந்துள்ளது.

விலங்குகளை பாதுகாப்பது போல, மனிதர்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்த, புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வனப்பகுதிகளில் இருந்து, விலங்குகள் ஊருக்குள் நுழையும் இடங்கள் கண்டறியப்பட்டு, 12 இடங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் கேமராக்கள் பொருத்தப்பட்டுஉள்ளன.

அத்துடன், 20 இடங்களில் ஒலி எழுப்பி எச்சரிக்கும் 'அலர்ட் டவர்'கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நடமாட்டம்



செயற்கை நுண்ணறிவு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை வைத்து, விலங்குகள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். விலங்குகள் வந்தால், மீண்டும் காட்டுக்குள் விரட்டி அடிக்கப்படும்.

இதேபோல, மனிதர்களும் வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைவது தடுக்கப்படும். மாவட்ட வன அலுவலர் நேரடி கண்காணிப்பில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement