யாருப்பா.. வெயிட், நான் ரொம்ப பிஸி.. நிதி செயலரை காக்க வைத்த வங்கி மேலாளர்

63


புதுடில்லி: பொதுத்துறை வங்கியின் மேலாளரை சந்திக்க ஒரு மணி நேரம் ஆகியுள்ளது. இது வழக்கம் தானே என நாம் நினைக்கலாம். ஆனால், வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தச் சென்ற அத்துறையின் செயலருக்கே இந்த நிலை தான் என்பது, மக்களின் நிலையை வெளிப்படுத்துகிறது.


மத்திய நிதி சேவைகள் துறை செயலர் நாகராஜு, நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த வாரம் டில்லியில் உள்ள மூன்று முக்கிய பொதுத்துறை வங்கி கிளைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக, தங்களது அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவர்கள் சென்றிருந்தனர்.


ஒரு வங்கிக் கிளையில், மேலாளரை சந்திப்பதற்கு, நாகராஜு ஒரு மணி நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் கூட, தனது அடையாளத்தை அவர் தெரிவித்த பிறகு தான் மேலாளரை சந்திக்க முடிந்திருக்கிறது. அவ்வளவு நேரம் அந்த மேலாளர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று விசாரித்தால், போன் பேசுவதில் பிஸியாக இருந்துள்ளார்.


இதேபோல, மற்ற இரண்டு கிளைகளிலும், அதிகாரிகளின் நடத்தை திருப்திகரமானதாக இல்லை. வங்கி அதிகாரிகளின் நடத்தையைக் கண்டு நிதி சேவைகள் துறை செயலர் அதிர்ச்சி அடைந்தார். ஆய்வின் முடிவில், பொதுத்துறை வங்கிகளை வாடிக்கையாளர்களிடம் இன்னும் கரிசனத்துடன் நடந்துகொள்ள அவர் வலியுறுத்தியுள்ளார். வரும் நாட்களில் நாடு முழுதும் ஆய்வுகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


* தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகள் பல விஷயங்களில் பின்தங்கியுள்ளன

* டிபாசிட் வளர்ச்சி, ஆர்.பி.ஐ.,க்கு வரும் புகார்கள் ஆகியவற்றில் இந்த அலட்சியம் பிரதிபலிக்கிறது

* 2024 டிசம்பர் காலாண்டில் பொதுத்துறை வங்கிகளின் சில்லரை டிபாசிட் வளர்ச்சி 8.80%, தனியார் வங்கிகளில் 13.50%

* 2023 - 24 நிதியாண்டில் ரிசர்வ் வங்கியில் அளிக்கப்பட்ட புகார்களில், 38.32% பொதுத்துறை வங்கிகள் மீதாகும்

* தனியார் வங்கிகளின் மீது 34.39 சதவீத புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.

Advertisement