பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!

10


புதுடில்லி: பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் நேரடி தொடர்பு குறித்த புதிய ஆதாரங்களுடன் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சந்தித்து இந்தியா புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் அதிரடி தாக்குதலை தாக்குப் பிடிக்காத பாகிஸ்தான், அந்நாட்டு டி.ஜி.எம்.ஓ., மூலம் வேண்டிக் கொண்டதன் பேரில், இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டது.


இருப்பினும், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் நேற்றிரவு தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இது இந்தியாவை மீண்டும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.


இது குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானின் இந்தப் போர் நிறுத்த மீறலை இந்தியா அதி தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. நமது படைகள் எல்லையில் தீவிரமாக கண்காணித்து வருகிறது, எனக் கூறினார்.


இந்தநிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை (தீர்மானம் 1267) இந்தியா சந்தித்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க இருக்கிறது. இந்த வாரத்தில் நடக்கும் இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானுக்கு இருக்கும் நேரடி தொடர்பு பற்றிய புது ஆதாரங்களையும் இந்தியா சமர்ப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267






ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267 என்பது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம். இந்தத் தீர்மானம் பயங்கரவாதப் பணப்பரிமாற்றம், ஆயுதங்கள் பெறுவதை தடுக்க குழுவை அமைத்து செயல்படும். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்து, நிதி மற்றும் ஆயுத உதவிகளை தடுப்பதில் இந்தக் குழு முக்கிய பங்காற்றும்.

Advertisement