கூட்டணி பற்றி கவலை வேண்டாம், நான் முடிவு செய்வேன்; பொறுப்பாளர்களுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்

7


மாமல்லபுரம்: கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். கவலைப்பட வேண்டாம் என்று கட்சி பொறுப்பாளர்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.

பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு இன்று (மே 11) நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து இருந்தனர்.

அறிவித்தபடி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு குழுக்களின் ஆடல், பாடல என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் அன்புமணி பேசியதாவது;

இன்றைய இளைஞர்களுக்கு நமது பாரம்பரியம் தெரியவில்லை. இந்தியாவில் ஓ.பி.சி., இடஒதுக்கீடு பெற்று தந்தது வே.ஆனைமுத்து, அடுத்தது ராமதாஸ். அவர் இல்லை என்றால் கல்வியில் ஓ.பி.சி.,க்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு இன்று வரைக்கும் வந்திருக்காது.

இன்று சமுதாயத்தில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகள் உங்களை ஓட்டு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். நம்முடைய உரிமைகளுக்காக நாம் கூடியிருக்கிறோம். எத்தனையோ முறை முதல்வரை சந்தித்தார். தொடக்க காலத்தில் முதல்வர் ஸ்டாலின் நன்றாக சந்தித்தார். உறுதியாக 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தருகிறேன் என்றார்.

திடீரென முதல்வர் மனதை மாற்றிக்கொண்டார். 2 ஆண்டு காலம் உறுதி அளித்தார். ஆனால் மத்திய அரசு தான் கணக்கெடுப்பு நடத்த முடியும் என்று கூறினார். தமிழக முதல்வருக்கு எல்லா அதிகாரம் இருக்கிறது, ஆனால் மனது இல்லை.

தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டைகாப்பாற்ற வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் என்று முதல்வர் சும்மா பேசினால் போதாது. சமூக நீதி மண் என்று பேசுகிறீர்கள், ஆனால் ஒன்றும் கிடையாது.

வரும்காலம் நம் காலம். யார் பின்னாலும் போகாதீர்கள், ஒட்டு மொத்த சொந்தங்கள் எங்கள் பின்னால் வாருங்கள். நாம் ஆள வேண்டும், ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் வேண்டும். தமிழக மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இப்போது இருப்பது போன்ற போலியான சமூகநீதியை அளிக்க மாட்டோம்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

தொடர்ந்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

10.5 என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் கொடுக்கிறபடி இல்லை. எனவே போராட்டத்தை அறிவியுங்கள் என்று எதிர்பார்த்து வந்திருக்கிறீர்கள் என்று தெரியும். நிச்சயமாக போராட்டத்தை அறிவிப்போம். இதுவரை நடந்திராத போராட்டம் அதுவாகத் தான் இருக்கும்.

ஒரு தொகுதியில் 2000 இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொருவரும் 100 ஓட்டுகள் என அந்த தொகுதியில் நாம் வெற்றி பெற முடியும். 50 தொகுதிகளில் நாம் சாதாரணமாக வெற்றி பெற முடியும். அதை நீங்கள் செய்யுங்கள். ஆனால் பலபேர் என்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். உழைக்கவில்லை, உழைக்காமல் வேறு எதையோ செய்து கொண்டிருக்கிறீர்கள்.

தனியாக யானை சின்னத்தில் நின்று 4 தொகுதிகளில் அன்று வெற்றி பெற்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். நமக்கு வெட்கமாக இல்லையா, அசிங்கமாக இல்லையா, கோபம் வரவில்லையா? ஆனால் கோபம் வரலை. நம் சமூக மக்கள் நமக்கே ஓட்டுபோடவில்லை.

இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் ஒவ்வொருவரின் கணக்கையும் முடித்துவிடுவேன். அப்படி என்றால் என்ன அர்த்தம், உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்எல்ஏ என்றாலும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன். சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறான்.

கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உனக்கு சீட்டு கிடைக்க வேண்டும், எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும். உங்களின் கணக்கு எடுக்கப்படுகிறது. காக்கா பிடித்தால் ஒன்றும் நடக்காது.

2000 இளைஞர்கள், இளம்பெண்களை சேர்ப்பேன், ஒருவர் 50 ஓட்டுகள் சேகரித்தால் 1 லட்சம் ஓட்டுகள், வெற்றி உறுதி. இதை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

வெளிப்பேச்சு, வெளிக்கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி. இனி, இது நடக்காது. நீ உன்னை திருத்திக் கொள். இன்னும் 4 செல்போன் வைத்துக் கொள். ரியல் எஸ்டேட் பண்ணிக்கொள், பிழைத்துக் கொள். ஆனால் நீ இந்த கட்சியில் இருக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் நிகழ்ச்சிகளை பார்க்கும் வண்ணம், எல்இடி திரைகள் பொருத்தப்பட்டு இருந்தன. குடிநீர், கழப்பிட வசதி, மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

Advertisement