ரயில்வே தண்டவாளத்தில் கான்கிரீட் சிலாப்; சிறுவன் உட்பட 5 பேரை பிடித்த போலீசார்

கோவை : கோவையில், ரயில் தண்டவாளத்தில் 'கான்கிரீட் சிலாப்' போட்ட, சிறுவன் உட்பட ஐந்து பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

கோவை, ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலம் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் கான்கிரீட் சிலாப்கள் போடப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். வேலி அமைக்க போடப்பட்டிருந்த கான்கிரீட் கற்கள், தண்டவாளம் மீதும், இரு தண்டவாளங்களுக்கு இடையேயும் கிடந்தது.

அதிகாலையில், அவ்வழியாக சென்ற ரயில் இன்ஜின், கான்கிரீட் சிலாப் மீது மோதிய தகவலும் கிடைத்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

சிறுவன் உட்பட ஐந்து பேர் கான்கிரீட் சிலாப்களை ரயில் தண்டவாளத்தில் போட்டதும், ரயில் இன்ஜின் மோதியதால், அவை உடைந்ததும் தெரிந்தது. அவ்வழியாக வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - கண்ணுார் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசியிருக்கின்றனர். கற்கள் வீசியதால், நீலகிரி எக்ஸ்பிரஸின் ஜன்னல் கண்ணாடி உடைந்துள்ளது.

தொடர் விசாரணையில், ஐந்து பேரும் கல்லுாரியில் படித்து வருவதும், அருகில் உள்ள பார்சல் நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிவதும் தெரிந்தது.

இதையடுத்து தினேஷ்கரண், 18, ஜெகதீசன், 18, சாரதி, 18, பிரதாப், 18 ஆகியோரை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய சிறுவனை, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Advertisement