கிருமிகளைக் கொல்லும் டப்பா

உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம். குளிர்சாதனப் பெட்டி, குறிப்பிட்ட நாட்கள் வரை தான் உணவைப் பாதுகாக்கும். தவிர உணவில் உள்ள கிருமிகளை அது கொல்லாது. உணவில் உள்ள ஆபத்தான கிருமிகள், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். எனவே கிருமிகளைக் கொன்று உணவுப் பொருட்களின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் சாதனத்தை சிங்கப்பூரில் உள்ள நான்யாங் பல்கலை வடிவமைத்துள்ளது.

இந்தச் சாதனத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று உணவு எடுத்துச் செல்லும் டப்பா போல் இருக்கும். இதனுடன் ஒரு சிறிய கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதிலிருந்து புற ஊதா கதிர்கள் உற்பத்தியாகும். பொதுவாகப் புற ஊதாக் கதிர்களை உற்பத்தி செய்யும் விளக்குகளில் பாதரசம் இருக்கும். இது நச்சுத்தன்மை கொண்டது. கெடுவாய்ப்பாக, இந்தப் பாதரசம் உணவில் பட்டுவிட்டால் அது விஷமாகிவிடும்.

அதனால் பாதரசத்தைப் பயன்படுத்தாமல் புற ஊதா கதிர்கள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் இதில் பயன்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இந்தக் கருவியில் உணவுகளை வைத்துப் பார்த்தார்கள். புற ஊதாக் கதிர்கள் 'சூடோமோனாஸ் ஏருஜினோசா,' 'எஸ்கெரிச்சியா கோலை,' 'லெஜியோனெல்லா நிமோபிலா' முதலிய பாக்டீரியாக்களை கொன்றுவிட்டன.

இந்தப் புற ஊதா விளக்கு பேட்டரியில் இயங்கும். பேட்டரியை ஒரு முறை முழுதாக சார்ஜ் செய்துவிட்டால் 20 முறை பயன்படுத்த முடியும். பொதுவாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் கூட சில பழங்கள், காய்கறிகள் சில நாட்களுக்கு மேல் தங்காது, அழுகிவிடும்.

ஆனால் இந்த டப்பாவில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அவை எளிதில் கெடாது. உதாரணமாகத் தக்காளி ஏழு நாட்களும், பன் 22 நாட்களும், ப்ளூபெர்ரி 28 நாட்களும் கெடாமல் இருந்தன. தற்போது சந்தைக்கு வந்துள்ள இந்தச் சாதனம் 79 யூரோவுக்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.7,544.

Advertisement