ராணுவ வீரர்களால் பெருமை: ராஜ்நாத் சிங்

புதுடில்லி: '' ஆயுதப்படை வீரர்கள், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களை அழித்துள்ளனர். இது பெருமைக்குரிய விஷயம்,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.


டில்லியில் நடந்த தேசிய தர நிர்ணய மாநாட்டில் அவர் பேசியதாவது: ஆயுதப்படையினர் நேற்று தைரியத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளன. இது பெருமைக்குரிய விஷயம்.


ஆபரேஷன் சிந்தூர் மூலம் துல்லிய தாக்குதல் செயல்படுத்திய விதம் கற்பனை செய்ய முடியாதது. 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவிகள் பாதிக்கப்படாமல், குறைந்தளவு சேதத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு நன்கு பயிற்சி பெற்ற நமது ஆயுதப்படை வீரர்களே காரணம். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.


2014 ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், பாதுகாப்பு உற்பத்தி துறைக்கு அதிகாரம் கிடைப்பதில் கவனம் செலுத்தினார். ஒரு நாடு அதன் பாதுகாப்பு தேவைகளில் தன்னிறைவு அடையும் வரை, அதை சுதந்திரமாக கருத முடியாது என்ற பாதுகாப்பு இறையாண்மையை உருவாக்கினார்.

நமது பாதுகாப்பு துறைக்காக ஏற்றுமதி செய்கிறோம் என்றால், நமது பாதுகாப்பை வெளியாட்களிடம் கொடுக்கிறோம் என்று அர்த்தம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement