பாக்.,கிற்கு ஐஎம்எப் நிதியுதவி: இந்தியாவின் முடிவு என்ன?

புதுடில்லி: ''பயங்கரவாத பின்னணி கொண்ட பாகிஸ்தான் பற்றி சர்வதேச அமைப்புகளுக்கு நன்றாக தெரியும்,'' என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும், பாகிஸ்தானை சர்வதேச அளவிலும் தனிமைப்படுத்தும் முயற்சியும் மற்றொரு புறம் நடக்கிறது. உலக வங்கி, ஆசிய வங்கி, சர்வதேச நிதியம் மூலம் அந்நாட்டிற்கு கிடைக்கும் கடனை தடுத்து நிறுத்தவும் முயற்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், அந்நாடு சர்வதேச நிறுவனங்களின் கடனுதவி கிடைக்காவிடில் கடுமையான சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்.
நாளை, பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் கடனை வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் ஐ.எம்.எப்., முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. முன்னதாக, அந்த அமைப்பின் இந்திய இயக்குநராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நீக்கப்பட்டார். அவருக்கு பதில், பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டார். திடீரென நடந்த இந்த மாற்றம் பலரின் கவனத்தை ஈர்த்தது. பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் அளிக்கும் கடனை தடுக்கும் முயற்சியாக இது இருக்கலாம் எனக்கூறப்பட்டது.
இந்நிலையில், டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியிடம், பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப்., கடன் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் அளித்த பதில்: சர்வதேச நிதியத்தில் இந்தியாவிற்கு என செயல் இயக்குநர் உள்ளார். நாளை, ஐஎம்எப் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவின் கருத்தை, இந்திய செயல் இயக்குநர் எடுத்து வைப்பார். ஐஎம்எப் முடிவு எப்படி இருக்கும் என்பது வேறு விஷயம். ஆனால், பாகிஸ்தானை மீட்க கடன் வழங்குபவர்களுக்கு அந்நாட்டின் அனைத்து தகவல்களும் தெளிவாக தெரியும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை
-
சிங்கபெருமாள் கோவிலில் தொடரும் நெரிசல் சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதே நிரந்தர தீர்வு
-
ப.வேலுார் கொங்கு மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை
-
பஸ் நிறுத்தத்தில் அட்டவணை வைக்க மக்கள் வலியுறுத்தல்
-
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 70 பள்ளிகள் 'சென்டம்'
-
விதைப்பு பணியில் மானாவாரி விவசாயிகள்