"ஆபரேஷன் சிந்தூர்" பெயருக்கு கூடுது மவுசு; குழந்தைக்கு பெயர் சூட்டிய பீஹார் தம்பதி!

பாட்னா: தேசபக்தி ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட பீஹாரில் ஒரு தம்பதியினர், ராணுவ நடவடிக்கையின் நினைவாக, தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு 'சிந்தூரி' என்று பெயரிட்டுள்ளனர்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் அந்நாடு ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை மூலம் இந்தியா தாக்கியது. இதனால் உலகம் முழுவதும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயர் பிரபலம் அடைந்துள்ளது.
இதை இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். இச்சம்பவம் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில், மே 7ல் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்டத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில், பீஹாரைச் சேர்ந்த சந்தோஷ் மண்டல் மற்றும் ராக்கி குமாரி தம்பதியினர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, ஆபரேஷன் சிந்தூரின் பெயரை 'சிந்தூரி' என்று பெயரிட்டுள்ளனர்.
தம்பதியின் உறவினர்களான குந்தன் குமார் மற்றும் சிம்பிள் தேவி, ராணுவ நடவடிக்கைக்காக வைக்கப்பட்ட பெயரை குழந்தைக்கு சூட்டியிருப்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகக் கருதுவதாக கூறினர்.
மேலும் அவர்கள், “பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியும், ஒரே நாளில் எங்கள் மகள் பிறந்ததும், எங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம்” என்று தெரிவித்தனர். ராணுவ நடவடிக்கைக்கு வைத்த பெயரை, தனது குழந்தைக்கு சூட்டி, தேசபக்தியை பீஹார் தம்பதி வெளிப்படுத்தி உள்ளனர் என நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
