wait கணவரை பிரிந்து வாழும் பெண்ணை கார் ஏற்றி கொன்ற இருவர் கைது

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோட்டயம் அருகே கணவரை பிரிந்து வாழும் பெண்ணை கார் ஏற்றி கொலை செய்ததாக ஆட்டோ டிரைவர்கள் இருவரை போலீசர் கைது செய்தனர்.

கோட்டயம் அருகே கருகச்சால் பகுதியைச் சேர்ந்தவர் நீது ஆர் நாயர் 35. கணவனைப் பிரிந்த இவர் சங்கனாச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட்க்கு நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த ஒரு கார் நீது மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீது இறந்தார்.

சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் கருகச்சால் போலீசார் விசாரணை நடத்தினர். விபத்தாக கருதப்பட்ட அது கேமரா பதிவுகளின் மூலம் கொலை என தெரியவந்தது.

நீதுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அன்ஷாத் கபீர் 37, என்ற ஆட்டோ டிரைவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. அவரிடமிருந்து நீது கடன் வாங்கியுள்ளார். அது குறித்து தகராறு இருந்து வந்த நிலையில் நீதுவை கொலை செய்ய அன்ஷாத் கபீர் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி காரை வாடகைக்கு எடுத்து தனது நண்பரான அப்துல் சலாம் 35, என்ற மற்றொரு ஆட்டோ டிரைவரையும் அழைத்துக் கொண்டு நீது வரும் வழியில் காத்திருந்தார். நீது நடந்து வருவதை பார்த்ததும் காரை வேகமாக ஓட்டிச் சென்று அவர் மீது மோதியுள்ளனர்.

இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement