ராணுவத்தில் மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியம்: தாராளமான அணுகுமுறை தேவை: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : ராணுவத்தில் மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியம் வழங்குவதில், தாராளமான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் சிப்பாயாக, கடந்த 1988ல் சேர்ந்த ஒருவர், 10 ஆண்டு சேவைக்கு பின், 1998ல் கொச்சியில் இருந்தபோது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு 1993ல் இருந்தே, 'ஸ்கிசோப்ரினியா' என்ற மாய உலகில் வாழும் மனச்சிதைவு நோய் இருந்ததாக, காரணம் கூறப்பட்டது.
அப்போது, பதற்ற சூழல் இல்லாத இடத்தில் அவர் பணியில் இருந்ததாகவும், மேற்கு பிராந்திய ராணுவ மருத்துவமனை, சான்றிதழ் அளித்தது.
மேல் முறையீடு
இதையடுத்து, ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் அவருக்கு முறையாக வழங்கவில்லை. இது தொடர்பாக, அவர் தாக்கல் செய்த மனுவை, முப்படையினருக்கான நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் கொச்சி அமர்வு தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு, அவருக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டது.
தீர்ப்பு விபரம்:
கடினமான காலங்களில் நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பின், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சேவையாளர்களுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்ட நல்ல திட்டத்தில், மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியமும் ஒன்று.
அத்தகைய நன்மை பயக்கும் விதிகளை, புரிந்துகொண்டு செயல்படுத்தும்போது, தாராள அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். ஒருவரை பணிநீக்கம் செய்ய, மருத்துவ வாரியம் வாயிலாக காரணங்களை வழங்குவது மிக முக்கியமானது; அவசியமானது.
27 ஆண்டுகள்
ஆனால், காரணமே இல்லாமல் மருத்துவ கருத்தின்படி, பணியில் இருந்து நீக்கியதோடு, மாற்றுத்திறனாளி ஓய்வூதியமும் மறுக்கப்பட்டு, அதன் காரணங்களும் தெளிவாக கூறப்படவில்லை என்றால், அதிகாரியின் நடவடிக்கை சட்டப்படி நிலைக்காது.
பணி நீக்கத்துக்கு பின், சலுகையை மறுக்கும் அதிகாரியின் செயலானது, சட்டத்தின் பார்வையில் செல்லாது. எனவே, மனுதாரருக்கு மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியத்தை மறுத்த உத்தரவு செல்லாது.
இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய, ராணுவ மருத்துவ வாரியத்துக்கு அனுப்பலாம் என்ற கேள்வி எழுந்தபோதிலும், ஏற்கனவே, ராணுவத்தில் இருந்து மனுதாரர் நீக்கப்பட்டு, 27 ஆண்டுகளான நிலையில், மருத்துவ வாரியம் செல்வது நீதியின் நலனுக்கு உகந்ததல்ல.
நிலுவைத் தொகை
மருத்துவ காரணங்களால், அவரை டிஸ்மிஸ் செய்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. ஆனால், மனுதாரருக்கு மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதிய பலனை உடனடியாக வழங்க உத்தரவிடுகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையையும் அவருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு