பாக்., தாக்குதல் முயற்சி; பதிலடியில் இறங்கிய ராணுவம்

ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் எல்லையில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் விமானப்படை தளங்களை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நேற்றிரவு நடத்தியது.


இவற்றை நம் படைகள், வான்வழி தாக்குதல் பாதுகாப்பு கவசத்தைப் பயன்படுத்தி, நடுவானிலேயே அழித்தன. ஜம்முவில் நேற்றிரவு 9:00 மணிக்கு பல்வேறு இடங்களில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து, அபாய சங்கு ஒலிக்கப்பட்டதை அடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


இதைத் தவிர, எல்லையில் இருந்து தொடர்ந்து, பீரங்கி வாயிலாகவும் குண்டுகளை பொழிந்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 'பிளாக் அவுட்' எனப்படும் இருளாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வான்வழி தாக்குதலை எச்சரிக்கும் சைரனும் ஒலிக்கப்பட்டது.


ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்.எஸ்.புரா, ஆர்னியா, அக்னுார் பகுதிகளை குறி வைத்து, பாகிஸ்தான் எட்டு ஏவுகணைகளை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், 'மொபைல் போன்' சேவைகள் முடங்கின. இதைத் தவிர, குப்வாரா, உதம்பூர், பதன்கோட் விமான தளத்தை குறி வைத்து, பாகிஸ்தான் ராணுவம், பீ
ரங்கி தாக்குதலை நடத்தியது.

இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் உஷார் நிலையில் இருந்த நம் படைகள், பாகிஸ்தானின் இந்த முயற்சிகளை முறியடித்தன.


மேலும் பஞ்சாபின் பெரோஸ்பூர், குருதாஸ்பூர், அமிர்தசரஸ், மொகாலி மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளிலும், சண்டிகரிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை இடையூறு இன்றி முறியடிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்ததை விமானப் படை முறியடித்தது. பலத்த வெடி சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்.


பாகிஸ்தான் விமானப்படையின் அத்துமீறலை தொடர்ந்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்றிரவு லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி நகரங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

சுட்டு வீழ்த்தப்பட்ட பாக்.,கின் எப் - 16 விமானங்கள்



இந்திய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானின் சர்கோதா விமானப் படை தளத்தில் இருந்து எப்.16 போர் விமானங்கள் நேற்றிரவு புறப்பட்டன. அதை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வாயிலாக நம் விமானப் படை சுட்டு வீழ்த்தியது.



ஐ.பி.எல்., ரத்து



இந்திய நகரங்களை குறிவைத்து நேற்றிரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய போது, ஹிமாச்சல் மாநிலம் தர்மசலாவில் நடந்த பஞ்சாப் - டில்லி இடையேயான ஐ.பி.எல்., போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. மைதானத்தை பகல் போல் காட்டும் பிரமாண்ட விளக்குகள் அணைக்கப்பட்டு, வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Advertisement