செங்குளம் சின்னகுளம் துார் வாரும் பணி துவங்கியது

போத்தனுார் : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, கில்பர்கோ வீடர் ரூட் நிறுவனம் இணைந்து, செங்குளம் (சின்னகுளம்) துார் வாரும் பணி நேற்று துவங்கியது.

குனியமுத்தூர் அருகே 40 ஏக்கர் பரப்பில் நொய்யல் ஆற்றின் ஒரு பகுதியாக செங்குளம் (சின்ன குளம்) அமைந்துள்ளது.

இங்கு குப்பைகழிவு கொட்டப்பட்டு, நீர் சேமிக்கும் பரப்பு குறைந்தது. சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.

இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இதனை துார் வார முடிவு செய்தது. இதற்கான செலவு தொகையை கில்பர்கோ வீடர் ரூட் இந்தியா நிறுவனம் தர முன் வந்தது.

இதையடுத்து ரூ. 78 லட்சம் செலவில் இப்பணியை முடிக்க திட்டமிட்டப்பட்டது. நேற்று காலை இப்பணியை மாவட்ட கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார்.

மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தலைட்சுமி, கில்பர்கோ வீடர் ரூட் நிறுவன துணை தலைவர் ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், ''இக்குளம் ஒரு மீட்டர் ஆழத்திற்கு துார் வாரப்படும். இதன் மூலம் ஐந்து கோடி லிட்டர் நீர் தேக்க முடியும். சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பல்வேறு பறவையினங்கள் இங்கு வரும். மரக்கன்றுகள் நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement