விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா

1


காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி கூட்டங்களை அதிரடியாக தகர்த்தெறிந்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஆண்டாண்டு காலமாக பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த பயங்கரவாதிகள் பலரும் இறந்தனர்.


'அடுத்த கட்டமாக தாக்குதல் இருக்காது. ஆனால், பாகிஸ்தான் மீண்டும் ஏதாவது விபரீத சாகசம் காட்டினால் இந்தியா தக்க பதிலடி அளிக்கும்' என ராணுவ தரப்பில் எச்சரிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில், இதை தெளிவாக விளக்கினார், இந்திய விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங். ஆனால், பாகிஸ்தான் தனது அடாவடிதனத்தை நிறுத்தியபாடில்லை. இந்தியா நடத்திய தாக்குதலில் வெகுண்டு எழுந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், 'நாங்கள் பதிலடி தருவோம்' என கொக்கரித்தார்.


ஜம்மு - காஷ்மீர் எல்லையில், கட்டுப்பாடு எல்லைக்கோடு பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் பகுதியில் உள்ள சீக்கிய குருத்துவாரா மீது தாக்குதல் நடத்தியது. இதில், 15க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், சீன தயாரிப்பு ஏவுகணையை அனுப்பி சோதித்து பார்த்தது பாகிஸ்தான். ஆனால், இந்தியாவின் வலுவான ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பு, சீன ஏவுகணையை வானத்தில் இடைமறித்து தாக்கி அழித்தது.


இதையடுத்து, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க, 'ஆப்பரேஷன் சிந்துார் - 2' தாக்குதலை இந்தியா துவக்கியுள்ளது. நேற்று ராணுவ தரப்பில், 'அப்பாவி மக்கள் பலரும், பாகிஸ்தான் தாக்குதலில் பலியாகி வருவதால் இந்தியா அமைதியாக இருக்காது. இதற்கு தகுந்த பதிலடி தரப்படும்' என எச்சரிக்கப்பட்டது. அவ்வாறே, பாகிஸ்தான் மீது தாக்குதல் நீடிக்கிறது. எல்லையில் தாக்கிய பாகிஸ்தானுக்கு பதிலடி தர அந்நாட்டின் எல்லைக்குள் புகுந்து, லாகூர், ராவல்பிண்டி, கராச்சி என பல பகுதிகளில் இந்தியா ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.


ஆப்பரேஷன் சிந்து என்பது பாகிஸ்தான் மீதான பயங்கரவாத எதிர்ப்பின் பலகட்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான். பாகிஸ்தானில், 21 இடங்களில் பயங்கரவாதிகள் பயிற்சி கூடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அதில் முதல் கட்ட தாக்குதலில், ஒன்பது இடங்களில் மட்டுமே இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது; அனைத்து இடங்களையும் நிர்மூலம் ஆக்கியது.


ஆனால், முக்கிய பயங்கரவாதியான மசூத் அசார், ஹபீஸ் சையத் உட்பட பலரும் தப்பியுள்ளனர். ராணுவ கட்டடங்களில் முக்கிய பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.


பயங்கரவாத சிந்தனை கொண்ட பாக்., ராணுவ தளபதி முல்லா முனீரும், இந்தியாவின் ஹிட் லிஸ்ட்டில் உள்ளார். ராணுவ தாக்குதல் தொடரும் பட்சத்தில் பயங்கரவாத தலைவர்கள் பலரும் கொல்லப்படலாம். தற்போது விடுபட்டு போன பலரும் கூண்டோடு அழிக்கப்படலாம். பயங்கரவாதத்தின் ஆணி வேரை அழித்து ஒழிக்கும் வரை, இந்தியாவின், 'ஆப்பரேஷன் சிந்துார்' இன்னும் பல கட்டங்களாக தொடர வாய்ப்புள்ளது.


-நமது நிருபர்-

Advertisement