மருந்து ஏற்றுமதிக்கு குவியும் 'ஆர்டர்'கள்: உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுமா?

சென்னை: இந்தியா - பாகிஸ்தான் இடையே, போர் நடந்து வரும் நிலையில், 'இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மருந்துகளுக்கு, முன் கூட்டியே ஆர்டர்கள் குவிந்து வருகின்றன' என, மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு, 2.40 லட்சம் கோடி ரூபாய் வரை இந்த ஏற்றுமதி நடக்கிறது.


குறிப்பாக, 'ஜெனரிக்' மருந்துகள் உற்பத்தியில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ளதால், மருந்துகளை முன் இருப்பில் வழங்கும்படி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, 'ஆர்டர்' கொடுத்து வருகின்றன.


இதுகுறித்து, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயசீலன் கூறியதாவது:

மருந்து, மாத்திரைகளை, பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு, மருந்து அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. சில நாடுகள் முன்கூட்டியே, வழக்கமான அளவில் இல்லாமல், கூடுதல் மருந்துகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன.


அதேநேரத்தில், நம் நாட்டில் மருந்து உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் இல்லை. சில மூலப்பொருட்கள் மட்டும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை இல்லையென்றாலும் சமாளிக்க முடியும். தற்போதைய சூழலில், மருந்து ஏற்றுமதி எவ்வித தடையும் இல்லாமல் நடக்கிறது. போர் அதிகரித்தாலும், உள்நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement