கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் இடம் தேர்வு செய்வதில் சிக்கல்

கீழடி: கீழடியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் இரண்டு கோடியே 83 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படும் என அறிவித்த நிலையில் கீழடியில் அரசு புறம்போக்கு இடம் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கீழடியில் மத்திய தொல்லியல் துறை அகழாய்விற்கு பின் கீழடியில் பண்டைய கால பொருட்கள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். திறந்த வெளி அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கீழடியில் இரண்டு கோடியே 83 லட்ச ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

போலீஸ் ஸ்டேஷன் கட்ட குறைந்த பட்சம் 10 சென்டில் இருந்து ஒரு ஏக்கர் இடம் தேவைப்படும், போலீஸ் ஸ்டேஷன் கட்டப்படுவதுடன் அதில் பணியாற்றுபவர்களுக்கு குடியிருப்புகளும் அமைக்கப்பட வேண்டும்.எனவே அனைத்து வசதிகளும் உள்ள இடம் தேவை.

கீழடியில் அரசு புறம்போக்கு இடம் ஏதும் கிடையாது. தனியார் நிலத்தை தான் விலைக்கு வாங்கி அமைக்க முடியும், இதுவரை இடம் தேர்வு செய்வது குறித்து எந்த வித அறிவிப்பும் வராததால் வருவாய்த்துறையினர் இடம் தேர்வு செய்யும் பணியை கண்டு கொள்ளவில்லை.

Advertisement