ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வாரச்சந்தை ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இப்பேரூராட்சியில் நான்கு ரோடு சந்திப்பில் இருந்து வேங்கைப்பட்டி செல்லும் ரோடு குறுகியதாக இருந்துவரும் நிலையில் இதன் இருபுறமும் கடைக்காரர்கள் உள்ளிட்டோர் பொருட்களை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இச்சாலையில் ஒரே நேரத்தில் ஒரு வாகனத்திற்கு மேல் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. வாரச்சந்தை தினமான வியாழக்கிழமை அவ்வழியாகச் செல்லும் மக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை வரும்போது அரை மணி நேரத்திற்கு மேல் காத்துஇருந்து செல்ல வேண்டி உள்ளது. போக்குவரத்து போலீசார் நெரிசலை சரி செய்ய முடியாமல் திணறுகின்றனர்.

இச்சாலையில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாரச்சந்தை நாட்களில் சாலையோர கடைகளை சந்தைக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement