ஏலத்தோட்டங்களில் நத்தைகள் மகசூல் பாதிக்கும் அவலம்

கம்பம்: ஏலத் தோட்டங்களில் கோடை கால மழையை தொடர்ந்து நத்தை கூட்டங்கள் தெரியத் துவங்கியுள்ளது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. அதிக மழை, அதிக வெயில் என சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக ஏலக்காய் சாகுபடி சிக்கலை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு கோடையில் விவசாயிகள் திருப்திபடும் அளவில் மழை கிடைத்தது. இதனால் நல்ல மகசூல் கிடைக்கும் என்று இருந்தனர். ஆனால் நந்தைகள் கூட்டம் ஆங்காங்கே ஏலத் தோட்டங்களில் தெரிய துவங்கி உள்ளது. கடந்தாண்டு அக்., காணப்பட்டது. நத்தைகள் பூக்கள் மற்றும் ஏலப் பழங்களை உறிஞ்சி குடித்து விடும் என்றும், இதனால் மகசூல் பாதிக்கும் என்கின்றனர்.

வண்டன் மேடு, பாம்பாடும்பாறை, ஆன விலாசம், புளியன் மலை, பத்து முறி சக்கு பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் நத்தைகள் அதிகம் காணப்படுவதாக பாம்பாடும் பாறை ஏலக்காய் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இரவு துவங்கும் நேரத்தில் தான் இதன் நடமாட்டம் இருக்கும் என்றும், இதை கைகளால் பிடித்து அழிப்பது தான் சிறந்த வழி என்று ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது.

மேலும் மழைக் காலங்களில் மட்டும் காணப்படும் இந்த நத்தை கூட்டங்கள் பற்றிய ஆய்வு ஏல ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement