கட்டுமான ஒப்பந்தம் இன்றி வீடு கட்டும் வேலையை ஒப்படைக்காதீர்!

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர் அதற்கான பணிகளை எப்படி, யார் வாயிலாக மேற்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் மேஸ்திரிகளை அணுகினால் போதும் அவர்கள் நமது விருப்பத்துக்கு ஏற்ப வீட்டை கட்டி கொடுப்பார்கள் என்ற நிலை இருந்தது.

ஆனால், தற்போது, பொறியாளர்கள் துணை இன்றி கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாது என்ற அளவுக்கு சூழல் மாறிவிட்டது. இதில் முறையான தகுதி வாய்ந்த பொறியாளர்களை மட்டுமே கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என அரசு துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த, 2019ல் அறிவிக்கப்பட்ட பொது கட்டட விதிகளின் அடிப்படையில் பொறியாளர்களை கல்வித்தகுதி அடிப்படையில் பதிவு செய்யும் நடைமுறை புழக்கத்துக்கு வந்தது. இதன்படி. பொறியாளர்கள் உள்ளிட்ட கட்டுமான திட்டங்களுடன் தொடர்புடைய, 12 வகை வல்லுனர்கள் பதிவுசெய்யப்படுகின்றனர்.

இதில் முறையாக எழுதப்பட்ட கட்டுமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே உங்கள் வீட்டை கட்டும் பொறுப்பை பொறியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கட்டுமான ஒப்பந்தம் தயாரிக்கும் நிலையில் அதில் என்னென்ன விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதில் உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கட்டுமான ஒப்பந்தம் எழுதப்படும் தேதி, அது எப்போது முதல் அமலுக்கு வருகிறது, கட்டுமான பணிகளை முடித்து வீட்டை எப்போது ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். நில உரிமையாளர், ஒப்பந்ததாரர் ஆகியோரின் பெயர், முகவரி, ஆதார் எண், மெபைல் எண், போன்ற அடிப்படை தகவல்களை சரியாக குறிப்பிட வேண்டும்.

உங்கள் வீட்டை கட்டும் பணிக்கான ஒப்பந்தம் எந்த மாதிரியானது என்பதை குறிப்பிட்டு அதற்கான வழிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும். இதில் மொத்த பணிகளும் ஒப்படைக்கப்படுகிறதா, லேபர் கான்ட்ராக்டா, மேட்டீரியல் வாங்குவது யார் பொறுப்பு என்பது போன்ற விபரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

புதிய வீடு எங்கு கட்டப்படுகிறது என்பதற்கான இடத்தின் முகவரி, நிலத்தின் அளவு உள்ளிட்ட அடிப்படை விபரங்களை கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிடுவது அவசியம். புதிய வீட்டுக்கான வரைபடம் தயாரிப்பது, அதற்கு ஒப்புதல் பெறுவது யார் பொறுப்பு என்பதையும் கட்டுமான ஒப்பந்த நிலையில் தெளிவுபடுத்த வேண்டும்.

வீட்டை கட்டுவது என்று மொட்டையாக இல்லாமல் அஸ்திவாரம் முதல் மேல் தளம் வரை என்னென்ன பணிகளுக்கு இது பொருந்தும் என்பதையும் தெளிவதக குறிப்பிட வேண்டும். பினிஷிங் நிலையில் எந்தெந்த விஷயங்களுக்கு ஒப்பந்ததாரர் பொறுப்பு என்பதையும் இதற்கான ஆவணத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement