வீடு வாங்கும் போது வாகன நிறுத்துமிட விஷயத்தில் கவனம் தேவை!

சென்னை போன்ற நகரங்களில் எப்படியாவது சொந்த வீடு வாங்கி அதில் குடியேற மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருப்போர் அதிகரித்து வருகின்றனர். வாடகை வீடுகளில் ஏற்பட்ட பல்வேறு கசப்பான அனுபவங்களால், சொந்த வீடு குறித்த ஏக்கம் பலருக்கும் அதிகரித்துள்ளது.

இது போன்ற அழுத்தங்களால் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று இறங்குவோர் அதில் குறிப்பிட்ட சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. குறிப்பாக வீட்டை பயன்படுத்த தேவையான அடிப்படை வசதிகள் விஷயத்தில் துளியும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறப்படுகிறது.

நகர், ஊரமைப்பு சட்ட விதிகளின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தும் போது, அதில், 750 சதுர அடிக்கு ஒரு கார், இரண்டு இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் இருக்க வேண்டும். நீங்கள் வீடு வாங்கும் திட்டத்தில் வரைபட நிலையில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

இதில் பல இடங்களில் அடுக்குமாடி திட்டங்களில், வீடு வாங்கும் போது, வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்குவதாக கூறி அதற்கு தனியாக சில லட்ச ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. சட்டப்படி வாகன நிறுத்துமிடத்துக்கு தனியாக விலை வைக்க கூடாது என்று கூறப்படுகிறது.

இருப்பினும், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் வாகன நிறுத்துமிடத்தை அமைத்து கொடுக்கிறோம் என்று சொல்லி, பணம் வாங்குகின்றன. போட்டி அதிகம் இருப்பதாக கூறப்படும் இடங்களில் வீடு கிடைத்தால் போதும் என்று நினைப்போர் இது விஷயத்தில் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

இந்த வகையில் நீங்கள் வீடு வாங்கும் கட்டுமான திட்டத்தில் வாகன நிறுத்துமிட வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று பாருங்கள். இதில் பெரும்பாலான மக்கள், தங்களிடம் வீடு வாங்கும் சமயத்தில் கார் இல்லை என்பதாலும், வாகன நிறுத்துமிடத்துக்கு தர வேண்டிய கூடுதல் தொகையை கருதியும் இதில் சில தவறுகளை செய்கின்றனர்.

இது போன்ற நிலையில் வீடு வாங்குவோர், வாகன நிறுத்துமிட ஒதுக்கீடு இல்லாததை ஏற்றுக்கொள்கின்றனர். இதனால், பிற்காலத்தில் அவர்கள் கார் வாங்கும் போது முறையான நிறுத்துமிடம் கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்படுவதுடன் பல்வேறு பிரச்னைகளும் வருகின்றன.

வீடு வாங்கும் சமயத்தில் உங்களிடம் கார் இருந்தாலும், இல்லாவிட்டாலும், வாகன நிறுத்துமிடத்தை பெற வேண்டியது அவசியம். ஒவ்வொரு வீட்டுக்கும் வாகன நிறுத்துமிடம் அடிப்படை தேவை என்பதை புரிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement