ரூ.75 லட்சம் தங்கக்கட்டி திருடிய ஊழியர் சிக்கினார்

ஆர்.எஸ்.புரம்:கோவை, தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வேந்திரன், 40. இவர், காந்திபார்க், சுப்ரமணியம் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சைலேந்திர சிங், 23, என்ற வாலிபர் பணியாற்றி வந்தார்.

தினமும் கடையை மூடிவிட்டு, சைலேந்திர சிங் கடை சாவியை எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த, 8ம் தேதி இரவு, செல்வேந்திரன் கடையை மூடிவிட்டு, சாவியை சைலேந்திர சிங்கிடம் கொடுத்து சென்றார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் செல்வேந்திரன் கடையை திறந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 750 கிராம் தங்கக்கட்டி காணாமல் போயிருந்தது.

ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணையில், சைலேந்திர சிங், தங்கக்கட்டி எடுத்ததை ஒப்புக்கொண்டார். அவர் தங்கியிருந்த அறையில் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டியை போலீசார் மீட்டனர். சைலேந்திர சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement