மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழுநிலவு மாநாடு பலத்தை காட்ட பா.ம.க., முடிவு

1

சென்னை : மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில், இன்று சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடக்கிறது.

வன்னியர் சங்கம், பா.ம.க., சார்பில், 1988 முதல் 2013 வரை, மாமல்லபுரத்தில், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டது.

பா.ம.க., - வி.சி., தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 2013க்குப் பின் மாநாடு நடக்கவில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு



இந்நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு பா.ம.க.,வை தயார் செய்யும் வகையில், மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில், இன்று மாலை 4:00 மணிக்கு சித்திரை முழுநிலவு மாநாட்டை, பா.ம.க., நடத்துகிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பேசுகின்றனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்; இதர பிற்படுத்தப்பட்டோரான ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டில், 'கிரிமீலேயர்' எனும் முன்னேறியவர் வரம்பை அகற்ற வேண்டும்; மது, கஞ்சா போதையை ஒழிக்க வேண்டும்; பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மாநாட்டை நடத்துவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அன்புமணி தீவிரம்



ராமதாஸ் -- அன்புமணி இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, கடந்த ஏப்ரல் 10ம் தேதி, பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு, 'இனி நானே தலைவர்' என, ராமதாஸ் அறிவித்தார்.

ஆனாலும், தலைவராக தொடர்வதாக கூறிய அன்புமணி, மாநாட்டு ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, தன் பலத்தை காட்ட அன்புமணி, கடந்த ஒரு மாதமாக உழைத்து வருகிறார். பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியாவும், பல மாவட்டங்களில் பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து, மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

'மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள், காவல் துறை விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று, கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்; சிறு சலசலப்புக்குக்கூட இடம் தரக்கூடாது' என, பா.ம.க., தொண்டர்களுக்கு, அன்பு மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement