தனியாக இருந்த மூதாட்டி நகை, பணத்திற்காக கொலை

ரிஷிவந்தியம்:வாணாபுரம் அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி, நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி சின்னபொண்ணு, 72. இவர், சின்னக்கொள்ளியூரில் உள்ள வீட்டிலும், மகன் வெங்கடேசன் வீட்டிலும் மாறிமாறி தங்கியிருப்பது வழக்கம்.

சில தினங்களுக்கு முன், சின்னக்கொள்ளியூர் வீட்டிற்கு சென்ற சின்னபொண்ணு அங்கேயே தங்கியிருந்தார். நேற்று காலை வெங்கடேசன் டிபன் வாங்கி, நண்பர் முகமதுஅலியிடம் தாய்க்கு கொடுத்தனுப்பினார். அவர் காலை, 9:00 மணியளவில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு சின்னபொண்ணு இறந்து கிடந்ததை பார்த்து வெங்கடேசனுக்கு தெரிவித்தார்.

பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு, வெங்கடேசன் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, சின்னபொண்ணுவின் கழுத்து இறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது காதில் இருந்த ஆறு கிராம் தங்கத்தோடு மற்றும் வீட்டில் இருந்த, 3,500 ரூபாய் திருடு போனது.

போலீசார் வழக்கு பதிந்து, மூதாட்டியின் உடலை, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகை மற்றும் பணத்துக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement