மூதாட்டியை கொன்று நகை திருடியவர் கைது

போசம்பட்டி:திருச்சியில், மூதாட்டியை அரிவாளால் வெட்டிக்கொன்று, மூக்குத்தியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், போசம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜம்மாள், 75. அதே ஊரில் வசிக்கும் தன் தம்பி பன்னீர்செல்வம் வீட்டில் தங்கியிருந்த மூதாட்டி, வீட்டுக்கு அருகே உள்ள வயல்வெளியில், மூக்கு அறுபட்ட நிலையில், தலையில் வெட்டுக் காயத்துடன் மர்மமான முறையில் 8ம் தேதி இறந்து கிடந்தார்.

பன்னீர்செல்வம் புகார்படி வழக்கு பதிந்த சோமரசம்பேட்டை போலீசார், அதே பகுதியை சேர்ந்த குணா, 27, என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். நகை பறிக்கும் நோக்கில், மூதாட்டியின் தலையில் அரிவாளால் தாக்கி, அவரது மூக்கை அறுத்து, மூக்குத்தியை திருடிச் சென்றது தெரியவந்தது.

போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

Advertisement