பாக்., ராணுவ அதிகாரிக்கு ஜனநாயக பாடம் நடத்திய வெளியுறவு செயலர்

1

புதுடில்லி: இந்திய அரசை சொந்த நாட்டு மக்களே போர் தொடர்பாக விமர்சித்ததாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கூறிய கருத்துக்கு, 'அதுவே வெளிப்படையான எங்கள் ஜனநாயகத்தின் சிறப்பு; அதற்கும், பாகிஸ்தானுக்கும் சம்பந்தமில்லை' என, வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீப் சவுத்ரி உள்ளார். இவர், இந்தியாவை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார். 'இந்திய அரசை அவர்களின் சொந்த நாட்டு மக்களே பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விமர்சிக்கின்றனர்' என்றார்.

இது குறித்து வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

பொது மக்கள் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். இது, இந்தியா போன்ற எந்தவொரு வெளிப்படையான ஜனநாயக நாட்டின் அடையாளம்.

மக்கள் தங்கள் நாட்டு அரசை விமர்சிப்பதை பார்த்து, பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். பாகிஸ்தானுக்கு ஜனநாயகம் குறித்த எந்த பரிச்சயமும் கிடையாது என்பதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியலமைப்பு ரீதியாக பாகிஸ்தான் ஜனநாயக நாடாக இருந்தாலும், 1947ல் இருந்து பல முறை ராணுவ ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

Advertisement