ஊராட்சிகளில் குடிநீர், அடிப்படை வசதிகளை பொது உபரித்தொகையில் மேற்கொள்ள உத்தரவு

சிவகாசி: தினமலர் செய்தி எதிரொலியாக மாவட்டத்தில் ஊராட்சிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொது உபரித்தொகையில் இருந்து மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் மோட்டார் மூலமாக மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகின்றது. ஊராட்சிகளில் குடிநீர் ஏற்ற பயன்படும் மோட்டார்கள் அவ்வப்போது பழுதடைவது இயல்பு. இதனை பழைய அரசாணையின்படி மோட்டார்களின் திறனைப் பொறுத்து விலைப்புள்ளி அடிப்படையில் ரூ. 7500 முதல் 12 ஆயிரம் வரை செலவழித்து பழுது பார்க்கப்படும்.

இதனால் மோட்டார் தயாராகி உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகம் பழுதடையும் மோட்டார்களை டெண்டர் அடிப்படையில் சரி செய்ய உத்தர விட்டிருந்தது. இத்திட்டத்தின் படி டெண்டர் விடப்பட்டு, அதை பரிசீலனை செய்து மோட்டாரை சரி செய்வதற்கு காலதாமதம் ஏற்படும். இதனால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்படும்.

எனவே பழைய அரசாணையின்படியே விலைப்புள்ளி அடிப்படையில் மோட்டார்களை சரி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொது நிதி உபரி தொகையிலிருந்து மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement