சண்டே ஸ்பெஷல்

காமிக்ஸ் உங்களுக்கு முதலில் எப்படி அறிமுகமாகியது?

 1984 ஜூலை மாதம். அப்பாவுக்கு மூக்குப் பொடி போடற பழக்கம் உண்டு. வாங்குவதற்காக கோவை ரங்கன் வீதில கடைக்கு அடிக்கடி போவேன். அந்த பெட்டி கடைல நிறைய கதை புத்தகங்கள் விற்பாங்க. அங்கு தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகங்களை வேடிக்கை பார்ப்பேன். அங்க தான் எனக்கு காமிக்ஸ் அறிமுகமானது. ஒரு நாள் 'மாடஸ்டி இன் இஸ்தான்புல்' கதையை படித்துக் கொண்டிருந்ததை பார்த்த அப்பாவின் நண்பர், அவரிடமிருந்த முத்து காமிக்ஸ் அனைத்தையும் வாசிக்க இரவல் தந்தார். இதனால் நுாறுக்கும் மேற்பட்ட காமிக்ஸ் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

 உங்கள் வாழ்க்கையில் அது ஏற்படுத்திய தாக்கம்?

 இங்கு ஒரு சிறுவனின் கதையைப் பற்றி கூற விரும்புகிறேன். அந்த சிறுவனின் தந்தை தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை இழந்ததால் ஆட்டோ ஓட்டி சொற்ப வருமானத்தில் ஐந்து குழந்தைகளுடனான குடும்பத்தை காப்பாற்றி கொண்டிருந்த தருணம். அவருடைய மூத்த மகனுக்கு என்னவென்று இனம் காண முடியாத மனநோய். அதனால் அவரும் அவருடைய மனைவியும் பல நாட்கள் பல கோயிலுக்கும் செல்ல வேண்டிய சூழல். அதனால் பெரும்பாலும் விவரம் அறியாத வயது சகோதரிகளால் வளர்க்கபட்டான் கடைக்குட்டி சிறுவன். மன அழுத்தம் என்றால் என்னவென்று அறியாத காலத்தில், மன அழுத்தத்தைப் போக்கி, வழி நடத்த ஆளில்லாத நேரத்தில் தன்னம்பிக்கை,தைரியம்,வைராக்கியம் என பலவற்றை விதைத்து சிறுவனை வழி நடத்தியது முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் புத்தகங்கள் தான். கூடப்பிறந்தவர்கள் யாரும் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்க இயலாத சூழலில், வறுமையை வென்று பட்டப்படிப்பு முடித்து, பல அயல்நாடுகளுக்கு சென்றதோடு, அமெரிக்க ஐ.டி., கம்பெனிகளில் உயரிய பொறுப்பை வகிக்க அவனை தயார் செய்தது அந்த புத்தகங்கள் தான்! அந்த கடைக்குட்டி பையன் நானே தான்!

 காமிக்ஸிற்கான நட்பு வட்டம் உருவாக்கியது எப்படி?

 2014ல் இந்தியா வந்திருந்த போது லயன் காமிக்ஸின் மறு வருகை பற்றி அறிய நேரிட்டது. கண்ணன், விஜயராகவன், தாரமங்கலம் பரணி தரன், பெங்களூரு பரணி, போஸ்டல் பீனிக்ஸ் ராஜா, சுந்தர், திருப்பூர் ப்ளூபெர்ரி நாகராஜன், பிரபாகர் என்று காமிக்ஸ் வாசகர்களாக இருந்த பல நண்பர்களின் அறிமுகம் ஏற்பட்டது. எல்லோரும் சேர்ந்து வாட்ஸ் ஆப் குழு ஆரம்பித்து நல்ல காமிக்ஸ் கதைகள் குறித்து அறிமுகம் செய்கிறோம்; விவாதம் செய்கிறோம். காமிக்ஸ் தொடர்பான கேள்வி-பதில், விமர்சன போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குகிறோம். சிறைச்சாலைகளுக்கு காமிக்ஸ் புக்ஸ் கொடுத்திருக்கிறோம். அடுத்த மாதம் 5 பள்ளி நுாலகங்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காமிக்ஸ் புத்தகங்கள் தர உள்ளோம்.

 குழந்தைகளுக்கானது தான் காமிக்ஸ் என நிறைய பேர் ஒதுங்கி விடுகிறார்களே?

 பல காமிக்ஸ்கள் சினிமாக்களுக்கு முன்னோடியாகவும் உள்ளது. குழந்தை இலக்கியம் என்பது தாண்டி காமிக்ஸ்கள் போர், சமூக நீதி, பொருளாதார அரசியல், வரலாறு என பல பிரிவுகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. பல கதைகள் அணு குண்டு வெடிப்பிலிருந்து அமெரிக்க அரசியல் சாசனம் வரை, நிறவெறி முதல் தாயின் இழப்பை உணர முயலும் குழந்தையின் வலி வரை பல தளங்களுக்கு வாசகர்களை அழைத்து செல்கிறது. இப்படி இருக்கையில் காமிக்ஸ் குழந்தைகளுக்கானது என்று நினைப்பது கூட ஒரு வகையில் குழந்தைத்தனமானது.

 உங்களை அதிகமாக பாதித்த காமிக்ஸ் எது?

 'கண்ணான கண்ணே' என்ற காமிக்ஸில் உடல்நிலை குறைவின் காரணமாக தாயை இழக்கவிருக்கும் ஒரு சிறுமி அந்த இழப்பை எப்படி உணருகிறாள் என்பதை சிறுமியின் பார்வையில் சொல்லியிருப்பார்கள். என்னை மிகவும் பாதித்த கதைகளில் ஒன்று. ஒரு விபத்து காரணமாக என் மனைவி ஆறு மாத ஓய்வில் இருந்ததால் மகளையும் மனைவியையும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சூழ்நிலையை என் மகள் எப்படி உணர்ந்திருப்பாள் என்பதை உணர இந்தக் கதை உதவியது.

'தனித்திரு தணிந்திரு' என்ற கதையில் சக மனிதர்களை நிற, இன வேறுபாடு காரணமாக கீழ்ப்படுத்தி வதைப்பதை, அதனால் ஏற்படும் வேதனைகளை, மனிதன் மிருகமாவதை ஓவியங்களின் மூலமாகவும் வசனங்களின் மூலமாகவும் உணர வைத்தது. காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் வாசிக்க வேண்டிய கிராபிக் நாவல்களில் ஒன்று இது.

காமிக்ஸ் குழுவில் இணைய ஆசையா? 97872 22717ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement