அன்னையர் தினம்

''எங்கம்மா சிங்கம்பட்டி ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே பட்டப் படிப்புக்கு ஈடான படிப்பை படித்தவர். அவரை 'கார்டியனாக' இருந்து வளர்த்தவர் சபாநாயகராக இருந்த செல்லபாண்டியன். எங்கப்பா செல்லமுத்து பொறியாளர். மணிமுத்தாறு அணை கட்டுமான பணியில் அப்பா ஈடுபட்டிருந்தார். அம்மா படித்துக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அப்பாவும், அம்மாவும் 'உதவி செய்ய நினைத்தால் செய்துவிடு' என்பார்கள். அதை இன்று வரை கடைபிடித்து வருகிறேன். எங்க பூர்வீக வீட்டில் எப்போதும் கூட்டம் இருக்கும். சமையலுக்கே நாலைந்து பேர் இருப்பார்கள்.
யார் வந்தாலும் சாப்பிடாமல் செல்வதில்லை. நான் அப்போது மதுரை அரசு மருத்துவமனையில் இதயவியல் நிபுணராக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தேன். அச்சமயத்தில் என் தம்பிக்கு மனநலம் பாதித்தது. அதற்கு சிகிச்சை பெற நீண்ட நேரம் பயணித்து டாக்டர்களை சந்திக்க வேண்டியிருந்தது.
எப்போதும் கலகலவென இருந்த வீடு அமைதியானது. அம்மாவும், அப்பாவும் தம்பியின் நிலையை பார்த்து 'இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் மனநிலை என்ன பாடுபடும்.
சமுதாய பார்வையை மாற்ற வேண்டும். அதனால் நீ மனநல டாக்டராகி விடு' என்றனர். அதை ஏற்று மனநலத்துறையில் பயிற்சி பெற ஆரம்பித்தேன். 5 நாட்களில் எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது. அப்போது மருத்துவக்கல்லுாரி துணைத்தலைவராக இருந்த அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் வெங்கிடசாமி, 'இதுவரை இதயத்தை திறந்து பார்த்தாய். இனி அவர்களின் மனதை திறந்து பார். அதன்பிறகு முடிவு செய்யலாம்' என ஊக்கமளித்தார். மூன்று நாளிலேயே எனக்கு மனநலத்துறை மீது ஈர்ப்பு வந்துவிட்டது.
'பணத்தை குறிக்கோளாக கொள்ளக்கூடாது. மனநலம் பாதித்தோருக்கு மருந்து, பயிற்சி தரவேண்டும்' என்று அப்பா எனக்கு வேதமந்திரமாக கூறிவிட்டு 3வது நாளில் இறந்துவிட்டார். அவர் நினைவாக 'செல்லமுத்து அறக்கட்டளையை' துவக்கி முகாம்களை நடத்த ஆரம்பித்தோம். சிகிச்சையோடு தொழில் பயிற்சியும் அளித்து வேலை வாய்ப்பும் தருகிறோம். எங்களுக்கு கிடைத்த விருதுகளை அம்மாவைதான் வாங்க செய்தோம்.
தினமும் அறக்கட்டளை இல்லத்திற்கு செல்ல அம்மா தவறமாட்டார். எனக்கு 'அதை சாப்பிடக்கூடாது; இதை சாப்பிடக்கூடாது' என குடும்பத்தினர் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், 'டேய், நாம ஜமீன்தாரர் குடும்பம்டா. நமக்கு சாப்பாட்டுக்கு கட்டுப்பாடு எல்லாம் கிடையாது' என்றுக்கூறி யாருக்கும் தெரியாமல் ஸ்வீட் போன்றவற்றை தந்து மகிழ்வார்.
ஓய்வு நேரங்களில் அவர் வீணை இசைத்து பாடுவது அவ்வளவு அழகாக இருக்கும். 'எனக்கு துன்பத்தை கொடு. மற்றவர்களுக்கு கொடுக்காதே' என அடிக்கடி கடவுளிடம் வேண்டுவார். அதேபோல் துாங்கிக்கொண்டிருக்கும் போதே உயிர் போக வேண்டும் என்றும் கூறுவார்.
அவரது எண்ணம் போலவே மார்ச் 27ம் தேதி நடந்தது. அவரது நினைவாக, அவர் துாங்கிய கட்டிலில் வீணையை வைத்து வணங்கி வருகிறேன். அதை பார்க்கும்போதெல்லாம் அம்மா இருப்பது போலவே தெரியும்..' என கண் கலங்குகிறார் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன்.
மேலும்
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது