அழகன்குளத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைப்பது எப்போது

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை நாவாய் என்ற பெயரில் மண்டபம் பகுதியில் ரூ.21 கோடியில் 20 ஆயிரம் சதுர அடியில் அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு அழகன்குளம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முன்னாள் ஊராட்சி தலைவரும், வழக்கறிஞருமான அசோகன் தமிழக அரசுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
அழகன்குளம் கோட்டைமேடு பகுதியில் 1986 முதல் 2016 வரை பல கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழகத்தில் எங்கும் கிடைக்காத பல்வேறு வகையான பழங்கால பொருட்கள் கிடைத்தன. இத்தாலி இலங்கை, சீனா, ரோம், எகிப்து மற்றும் பல நாடுகளுடன் வணிக தொடர்பில் இப்பகுதி இருந்துள்ளது.
அழகன்குளம் சங்க காலத்தில் துறைமுகப்பகுதியாக இருந்துள்ளது. சங்க கால பாடல்களான பரிபாடல், மதுரை காஞ்சி, அகநானுாறு ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அழகன்குளத்திலேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதற்காக சர்வே எண் 56/3ல் 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு 2020 ல் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 10.01.2025ல் அழகன்குளத்தில் அமைக்கப்படாமல் மண்டபம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாக தொல்லியல் துறையினர் கடிதம் எழுதினர். அதிர்ச்சியடைந்த எங்கள் பகுதி மக்கள் சார்பில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.
நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வில் வழக்கு தொடுத்தேன். அதில் நீதிமன்றத்தில் எனது கோரிக்கையை பரிசீலிக்க கோரி உத்தரவிட்டார்கள். அழகன்குளத்தில் அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கு போதுமான இடவசதி உள்ளது.
தங்களது கடிதத்தில் தெரிவித்தது போல் மண்டபத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கும் பட்சத்தில் அது இருபுறமும் கடல் சூழந்த பகுதியாகும் விரைவில் பொருட்கள் துருப்பிடிக்கும் நிலை உள்ளது. அகழாய்வு பொருட்களை பாதுகாப்பாக அங்கு காட்சி படுத்த முடியாது.
அழகன்குளத்தில் எடுக்கப்பட்ட பொருட்கள் அங்கு காட்சிப்படுத்த முடியாதது துரதிருஷ்ட வசமானது. நாவாய் என்ற சொல்லே அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டோவியம் மூலம் அறியப்பட்டது.
கீழடியில் எடுக்கப்பட்ட பொருட்கள் அந்த பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அழகன்குளத்தில் எடுக்கப்பட்ட பொருட்களை அழகன்குளத்திலேயே காட்சிப்படுத்த வேண்டும். அழகன்குளத்திற்கு வரும் தொல்லியலாளர்கள், மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பாமல் தடுக்க வேண்டும். அழகன்குளம் கிராமம் ராமநாதபுரம்- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது.
ராமேஸ்வரம் வரும் பயணிகள் பார்வையிட வசதியாக இருக்கும். எனவே உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் அழகன்குளம் பகுதியிலேயே பொருட்களை காட்சிப்படுத்த முன் வர வேண்டும், என அவர் முதல்வர், தொல்லியல் துறை அமைச்சர், ஆணையாளர், கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது