நகருக்கு நடுவே மாட்டிறைச்சி கழிவு தொற்று நோய் பாதிக்கும் அபாயம்

சிங்கம்புணரி,: சிங்கம்புணரியில் நகருக்கு நடுவே மாட்டிறைச்சி கழிவு குவிந்து கிடப்பதால் சிறுவர்கள் உள்ளிட்டோர் தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இப்பேரூராட்சியில் சிறுவர்பூங்கா அருகே உள்ள மாணிக்கம் தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இங்கு இறந்த, வயதான மாடுகளை தோல், இறைச்சிக்காக அறுக்கின்றனர். அறுக்கப்பட்ட மாட்டின் எலும்பு, கழிவு அப்பகுதி வீடுகள் முன் குவித்து வைக்கப்படுகின்றன.

இதனால் அச்சுற்று வட்டாரத்தில் துர்நாற்றம் வீசுகிறது. பெண்கள் உள்ளிட்ட பெரியவர்களுக்கு உடம்பு முழுவதும் கிருமித் தொற்றால் பல்வேறு வகையான தழும்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.

மாட்டு கழிவுகளால் உருவாகும் கிருமிகளால் அத்தொழிலில் ஈடுபடுவோர் மட்டுமின்றி, அவர்களது குழந்தைகள், பக்கத்து தெரு மக்கள், அவ்வழியாக செல்வோர் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

சுகாதாரம் கருதி நகருக்கு வெளியே இறந்த மாடுகளை அறுக்கவும், கழிவுகளை புதைக்கவும் ஒதுக்குப்புறமான இடம் ஒதுக்கித் தர அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் இன்னும் உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே விரைந்து இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement