ராமேஸ்வரத்தில் சுகாதார பணியாளர்கள் இல்லை நோய் பரவும் அபாயம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் ஒரு சுகாதாரப் பணியாளர் கூட இல்லாததால் கொசுக்கள் தொல்லை அதிகரித்து மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் 1 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு கொசுக்களின் புகலிடமான நீர் தேங்கும் குட்டைகள், கிணறுகளில் மருந்து தெளித்து வீடு தோறும் மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட நிர்வாகம் 20 சுகாதார பணியாளர்களை நியமித்தது.

இவர்கள் ராமேஸ்வரம் பகுதியில் காய்ச்சல் பாதித்த பகுதிக்கு சென்று மருத்துவ முகாம் நடத்தவும், மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.

இந்த 20 பணியாளர்களும் ஓய்வு பெற்றும், பணியிட மாறுதலாகி சென்றதால் தற்போது ஒரு பணியாளர் கூட இல்லை.

இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த, காய்ச்சலின் வீரியம் குறித்து கண்டறிந்து மேலும் பரவாமல் தடுக்க ஒரு சுகாதாரப் பணியாளர்கள் கூட இல்லை.

இதனால் இப்பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகரித்து மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

ராமேஸ்வரம் நகராட்சியில் தற்காலிக பெண் களப்பணியாளர்கள் 30 பேர், பெயரளவுக்கு வீட்டு கிணற்றில் மருந்து ஊற்றி செல்கின்றனர்.

இவர்களால் கொசு ஒழிப்பு மருந்து தெளித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை. இது தவிர பாம்பன், தங்கச்சிமடத்தில் எவ்வித சுகாதார விழிப்புணர்வு இன்றி மக்கள் பாதித்துள்ளனர்.

Advertisement