பார்லி சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்

3

புதுடில்லி: ''பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடிதம் எழுதி உள்ளனர்.


கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், நேற்று மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து இரு நாடுகளும் போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், ''பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடிதம் எழுதி உள்ளனர். கடிதத்தில் இரு தலைவர்களும் கூறியிருப்பதாவது: பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.



கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் நிறுத்த ஒப்பத்தம் குறித்து விவாதிக்க வேண்டும். போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அறிவித்தது தொடர்பாக விவாதிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் ராகுல், கார்கே கூறியுள்ளனர்.


இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம், பார்லி சிறப்புக் கூட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement