நாட்டின் பாதுகாப்புக்கு செயற்கைக்கோள் கண்காணிப்பு அவசியம்; இஸ்ரோ தலைவர் நாராயணன்

1

இம்பால்: நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக 24 மணிநேரமும் செயற்கைக்கோள்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெற்ற மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் 5வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது; நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கியமான நோக்கத்திற்காக குறைந்தது 10 செயற்கைக்கோள்கள் இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.


நமது அண்டை நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது அவசியம். நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால், செயற்கைக்கோள்கள் மூலமாகவே நாம் கண்காணிக்க வேண்டும். 7,000 கிலோ மீட்டர் நீளமுள்ள கடலோரப் பகுதிகள் முழுவதையும், வடக்கு எல்லைப் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது கட்டாயம்.



இந்தியாவின் எல்லைப்பகுதியில் 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். செயற்கைக்கோள்கள் மற்றும் டிரோன் தொழில்நுட்பம் இல்லாமல் இதை சாத்தியமாக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement