1971 ல் இருந்த சூழ்நிலை வேறு; இப்போதுள்ள சூழ்நிலை வேறு: காங்.,க்கு சசி தரூர் பதில்

15

புதுடில்லி: பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா தலைமையை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்து வரும் நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், 1971 ம் ஆண்டு, 2025ம்ஆண்டு சூழ்நிலையும் வெவ்வேறானவை எனக்கூறியுள்ளார்.

விமர்சனம்



இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் போர் நிறுத்தம் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ், 1971ம் ஆண்டு நடந்த போரின் போது, பிரதமராக இருந்த இந்திரா புகைப்படத்தை வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்து இருந்தது. இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்து இருந்தது.

பயங்கரவாதிகளுக்கு பாடம்



இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் கூறியதாவது: இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம், கட்டுப்பாட்டை தாண்டி சென்று விடக்கூடாது என்பது எனது எண்ணம். நமக்கு அமைதி முக்கியம். 1971 ல் இருந்த சூழ்நிலை, 2025ம் ஆண்டில் கிடையாது. நிறைய வேறுபாடு உள்ளது.
இந்திய மக்களுக்கு அமைதி நிலவுவது முக்கியம். பூஞ்ச் மாவட்டத்தில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை அங்கு வசிப்பவர்களிடம் கேட்க வேண்டும். போரை நாம் நிறுத்த வேண்டும் என நான் கூறவில்லை. போரை தொடர்வதற்கான காரணம் இருந்தால் அதனை நாம் தொடரலாம். ஆனால், தற்போது நடந்ததை தொடர்வதற்கு அது போர் கிடையாது. பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க நினைத்தோம். அந்த பாடம் கற்பிக்கப்பட்டு விட்டது.

அமைதி முக்கியம்



பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடும் என்று நான் நம்புகிறேன். இது ஒரே நாளில் நடக்காது. இதற்கு ஒரு மாதம் அல்லது சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால், அதனை செய்ய வேண்டும். அப்பாவி இந்திய மக்களை கொன்றவர்களை தப்ப விடக்கூடாது. ஆனால், இதற்காக, நாட்டை அச்சுறுத்தலில் தள்ளும் வகையில் நீண்ட கால போரில் ஈடுபட வேண்டும் என்பதற்கு அர்த்தம் கிடையாது. பாகிஸ்தானுடன் மோதல் ஏற்பட்ட நிலையில், மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தலில் ஈடுபடுத்துவது சரி கிடையாது. இந்திய மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி மற்றும் அது சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும. இந்த தருணத்தில் அமைதி நிலவுவது முக்கியமானது.

வெவ்வேறானவை



1971 ம் ஆண்டு இந்த துணைகண்டத்தின் வரைபடத்தை முன்னாள் பிரதமர் இந்திரா மாற்றியமைத்தார். ஆனால் சூழ்நிலை வேறாக இருந்தது. இன்றைய பாகிஸ்தானில் வேறு சூழ்நிலை உள்ளது. அவர்களிடம் உள்ள தளவாடங்கள், ராணுவ தளவாடங்கள், அவர்களால் செய்ய முடஇயும் பாதிப்புகள் அனைத்தும் வெவ்வேறானவை. இவ்வாறு சசிதரூர் கூறினார்.

Advertisement