மாலத்தீவுக்கு ரூ.420 கோடி நிதி வழங்கி இந்தியா தாராளம்!

5

புதுடில்லி: மாலத்தீவுக்கு ரூ.420 கோடி இந்தியா நிதியுதவி வழங்கி உள்ளது. இதற்கு மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் மாலத்தீவு நன்றி தெரிவித்துள்ளது.


அண்டை நாடான மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியவர் முகமது முய்சு. சீனாவுடன் நட்புறவு பாராட்டிய அவர், இந்திய விரோத செயல்பாடுகளை அதிகப்படுத்தினார். மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் அங்கு முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற்றினார்.

தொடர்ச்சியான இந்திய விரோத செயல்பாடுகள், இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்களின் வெறுப்பு பிரசாரம் காரணமாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கு பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு அன்னிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் தான், மீண்டும் உதவி கேட்டு இந்தியாவிடம் வந்துள்ளது மாலத்தீவு அரசு.இந்தியா கடந்தாண்டு வழங்கிய 50 மில்லியன் டாலர் (ரூ.420 கோடி) அவசர கால நிதியுதவியை, இந்தாண்டும் நீட்டிக்கும்படி மாலத்தீவு வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட இந்தியா, ரூ.420 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது.



இதற்கு, மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் மாலத்தீவு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஹாலீல் கூறியதாவது:


மாலத்தீவுக்கு நிதி உதவியை வழங்கியதற்காக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சரியான நேரத்தில் மாலத்தீவுக்கு இந்தியா உதவி உள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை மேலும் வலுப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement