காஷ்மீர் பிரச்னையில் யாரின் மத்தியஸ்தமும் அவசியமில்லை: டிரம்புக்கு இந்தியா பதிலடி

புதுடில்லி: காஷ்மீர் பிரச்னையில் எந்த நாட்டின் மத்தியஸ்தமும் அவசியம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில் இந்திய ராணுவம் கடந்த வாரத்தில் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதை எதிர்த்து பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதல்களை நமது வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்தன.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் ஆபரேஷன் சிந்தூர் இன்னமும் முடிய வில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது. அதே நேரத்தில் எந்த சூழலிலும் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரமும் அளிக்கப்பட்டு உள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா கடும் முஸ்தீபுகளை முன் எடுத்து வரும் நிலையில், காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். அவரின் அறிவிப்பு, உலக நாடுகள் இடையே விவாதமாக மாறி உள்ள நிலையில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
காஷ்மீர் பிரச்னையில் எந்த நாட்டின் மத்தியஸ்தமும் அவசியம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு தெளிவான நிலைப்பாடு இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்பது மட்டும் தான் இன்னும் பாக்கியாக உள்ளது. இதில் இன்னொரு நாடு பேசுவதற்கு என்று வேறு எதுவும் இல்லை.
பயங்கரவாதிகளை ஒப்படைப்பது பற்றி அவர்கள்(பாகிஸ்தான்) பேசினால் நாம் பேசலாம். வேறு எதையும் பேசுவதற்கு தயாராக இல்லை. யாரும் மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. யாரும் மத்தியஸ்தம் செய்ய எங்களுக்குத் தேவையும் இல்லை.
இவ்வாறு மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.











மேலும்
-
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதிப்பு
-
எல்லையில் தணிந்தது பதற்றம்; மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவு
-
ஆதரவற்ற மாணவர்களை அடையாளம் காட்டுங்கள்
-
சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கோலி
-
மாலத்தீவுக்கு ரூ.420 கோடி நிதி வழங்கி இந்தியா தாராளம்!