சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கோலி

5

புதுடில்லி: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அண்மையில் ரோகித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், இவரும் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


முன்பு ஓய்வு முடிவை தெரிவித்த போது, அதனை ஏற்க மறுத்த பி.சி.சி.ஐ., கோலியின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர் தனது ஓய்வு முடிவு எடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"14 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இந்த டெஸ்ட் கிரிக்கெட்டானது, பல சோதனைகளையும், பாடங்களையும் சொல்லிக் கொடுத்துள்ளது. அது என்னுடைய வாழ்க்கைக்கும் உதவியது.


வெள்ளை நிற ஆடையில் விளையாடுவது எப்போதும், ஆழமான உணர்வை தரும். இந்தக் கடினமான முடிவை, சரியான நேரத்தில் எடுத்துள்ளேன். என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன், எனக் கூறினார்

.
123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 9,230 ரன்களை விளாசியுள்ளார். அதில், 30 சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும். 7 முறை இரட்டை சதங்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 254 ரன்கள் (நாட் அவுட்) எடுத்துள்ளார். இவரது கேப்டன்ஷியில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


விராட் கோலியின் இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement