ஏ.டி.எம்., சேதம் இல்லாமல் ரூ.10 லட்சம் திருட்டு: குருகிராமில் நுாதன சம்பவம்

குருகிராம்: குருகிராமில் உள்ள ஒரு ஏ.டி.எம்.,இயந்திரம் சேதாரம் இல்லாமல் ரூ. 10 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் டில்லி-ஜெய்ப்பூர் தேசிய நெஞ்சாலையில் ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்.,மில் ரூ.10 லட்சம் திருடப்பட்டது.
இந்த சம்பவம் ஏப்ரல் 30ம் தேதி இரவு நடந்தது. வங்கிகளின் ஏ.டி.எம்.,களை பராமரிக்கும் ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸின் ஊழியர் கவுரவ் குமார் பைஸ்லா திருட்டு குறித்து சதார் போலீசில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி சுனில் குமார் கூறியதாவது:

குற்றவாளிகள் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை திருடிச் சென்றுள்ளனர். ஏ.டி.எம்., மையத்திலிருந்து டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (டிவிஆர்), பேட்டரி, ஹார்ட் டிஸ்க், பிசி கோர் மற்றும் பூட்டு ஆகியவற்றையும் திருடிச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம். மிஷினுக்கு எந்தவித சேதமும் இல்லாமல் நடந்த திருட்டு என்பது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. திருடர்கள் ஏடிஎம் மையத்தின் வீடியோ பதிவு அமைப்பை முடக்கி, இயந்திரத்தின் பாதுகாப்பு அமைப்பை ஹேக் செய்து திருட்டை நடத்தியிருக்கலாம்.

சம்பவம் நடந்த விதம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியை நாங்கள் நாடியுள்ளோம். அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சி.சி.டி.வி., காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சுனில் குமார் கூறினார்.

Advertisement