பாண்டிங் துணிச்சல் முடிவு

புதுடில்லி: பஞ்சாப் அணியை சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பாமல் இருக்க, பயிற்சியாளர் பாண்டிங் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
தர்மசாலாவில் நடந்த பஞ்சாப்-, டில்லி இடையிலான லீக் போட்டி (மே 8), இந்தியா, பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. விமான நிலையம் மூடப்பட்டதால், இரு அணிகளை சேர்ந்த வீரர்கள், ரயில் மூலம் தர்மசாலாவில் இருந்து டில்லிக்கு அழைத்துவரப்பட்டனர். பல்வேறு அணிகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர்.

பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும், சொந்த ஊருக்கு திரும்ப இருந்தார். போர் நிறுத்தப்படுவதாக அறிவித்த பின், தனது பயணத்தை ரத்து செய்து இந்தியாவிலேயே இருக்க முடிவு செய்தார். தற்போது டில்லியில் உள்ள பாண்டிங், பஞ்சாப் அணியை சேர்ந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டாய்னிஸ், ஜோஷ் இங்லிஸ், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட் ஆகியோரையும் இந்தியாவில் இருக்க வைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த யான்சென் மட்டும் துபாய் சென்றுள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.,) சதிஷ் மேனன் கூறுகையில், ''ஆஸ்திரேலிய வீரர்கள் தாயகம் திரும்ப தயாராக இருந்தனர். போர் பதட்டத்தில் இருந்த அவர்களை இந்தியாவில் இருக்க பயிற்சியாளர் பாண்டிங் சம்மதிக்க வைத்துள்ளார். இது, அவராமல் மட்டுமே சாத்தியம்,'' என்றார்.



தப்பிய ஆஸி., வீரர்கள்


பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஆஸ்திரேலியாவின் சீன் அபாட், பென் டிவார்ஷியஸ், ஆஷ்டன் டர்னர், மிட்ச் ஓவன் பங்கேற்றிருந்தனர். இத்தொடர் போர் காரணமாக ஒத்திவைக்கப்பட, ராவல்பிண்டி நுார் கான் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்றனர். இவர்கள் புறப்பட்ட சில மணி நேரத்தில் நுார் கான் விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தது. சிறிது தாமதித்திருந்தாலும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

Advertisement