அரசு நிதியில் ரூ.80 லட்சம் மோசடி: ஒடிசாவில் 5 வனத்துறை அதிகாரிகள் கைது

புவனேஸ்வர்: ரூ.80 லட்சம் அரசு நிதியை மோசடி செய்ததாக, 5 வனத்துறை அதிகாரிகளை ஒடிசா ஊழல்தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலம் காலஹண்டி மாவட்டத்தில் 'இழப்பீட்டு காடு வளர்ப்பு திட்டத்தின்' கீழ் ரூ.80 லட்சம் அரசு நிதியை மோசடி நடந்திருப்பதாக ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. மாநிலத்தில் ஊழல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்தில் பேரில் நடந்த விசாரணையில், வனத்துறை அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து ஊழல் தடுப்பு போலீசார் கூறியதாவது:

மாநிலத்தின் தெற்கு வனப் பிரிவின் காலஹண்டியின் ஜெய்பதானா பகுதியில், இழப்பீட்டு காடு வளர்ப்பு திட்டத்தின்" கீழ் அரசு நிதியை பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான நம்பகத்தன்மை அடிப்படையில், காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் தோட்டங்களைச் சரிபார்க்க சென்றோம்.ஜெய்பதானா ரேஞ்சின் கீழ் உள்ள தோட்ட நிலங்களை, எங்களது 25 அதிகாரிகள் கொண்ட 4 குழுக்கள் விசாரணை நடத்தி முழுமையாக கணக்கெடுத்தன.

விசாரணையில், தோட்ட நிதி பல போலியான தொழிலாளர் கணக்குகளுக்கு திருப்பி விடப்பட்டு, அதன் பிறகு சிறிது நேரத்திலேயே திரும்பப் பெறப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

அதை தொடர்ந்து நடத்திய விசாரணையில்,ஜெய்பதானா ரேஞ்ச் பொறுப்பாளர் சாய்ரேந்திரி பாக், வனவர் உமேஷ் ரவுத், வனவர் தேப்ராஜ் சுனானி, வனவர் அசோக் குமார் சாஹு மற்றும் வனக் காவலர் லலித் நாயக் ஆகிய 5 வன அதிகாரிகள் மீது முதல் கட்ட நடவடிக்கையில் , நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் கிடைத்தன.

இவர்கள் அனைவரும் ஜெய்பதானா ரேஞ்சைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டில் மேற்கண்ட தோட்டப் பணிகளில் 79,54,635 ரூபாய் அரசு பணத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக உடந்தையாக இருந்தனர் என்று தெரியவந்த நிலையில், ஐந்து பேரையும் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement