அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரலாற்று வெற்றி: மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

புதுடில்லி: அசாம் பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இது குறித்து அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அசாம் பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியானது, பிரதமர் மோடியின் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். இந்த "வரலாற்று வெற்றியை" வழங்கியதற்காக மக்களுக்கு நன்றி.இது அசாமில் அமைதி மற்றும் செழிப்புக்கான புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அமித்ஷா பதிவில் கூறியுள்ளார்.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிவிட்டுள்ளதாவது:
'ஜில்லா பரிஷத்' எனப்படும் மாவட்ட அளவிலான உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் 397 இடங்களில் 300 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 76.22 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது, 'அஞ்சலிக் பஞ்சாயத்து' எனப்படும் கிராம பஞ்சாயத்துக்களின் தேர்தலில் ஆளும் கூட்டணி 2192 இடங்களில் 1436 இடங்களைப் பெற்று 66 சதவீத வாக்குகளைப் பெற்றது.
பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய அசாம் மக்களுக்கு நன்றி. என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிவில் கூறியுள்ளார்.