ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் புதுச்சேரிக்கு பயனில்லை: மக்களின் வரிப்பணம் பாழானதே மிச்சம்

புதுச்சேரி: அண்ணா திடலில் அனைத்து பணிகளும் அரைகுறையாக பாதியில் நிற்க அவசர அவசரமாக திறக்க ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நகரின் மையத்தில் உள்ள அண்ணா திடலில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 9.60 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியம் கட்டும் பணி கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி துவங்கியது. கால்பந்து, டென்னிஸ், பேட்மிட்டன் மைதானங்கள், பார்வையாளர்கள் கேலரிகளுடன் அமைகிறது.
மைதானத்தை சுற்றி அண்ணா சாலை குபேர் பஜாரில் இருந்த 80 கடை கள், லப்போர்த் வீதியில் 20, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் 79 கடை களை இடித்து அகற்றிவிட்டு புதிய கடைகள் கட்டும் பணி நடந்தது. இப்பணிகள் ஓராண்டு காலத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
மைதானம் கட்ட தனியார் கன்சல்டிங் நிறுவனம் கொடுத்த பிளானை சரிவர ஆய்வு செய்யாமல் டெண்டர் விடப்பட்டது. அதனால் கட்டுமான பணி நடக்கும் போதே திட்டத்தில் பல மாற்றங்களை ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் செய்தனர்.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் அண்ணா திடல் பயன்பாட்டிற்கு வராமல் ஜவ்வாக இழுத்து கொண்டுள்ளது. திறப்பு விழா காணாமல் அண்ணாதிடல் தள்ளாடிக் கொண்டு இருக்க, மற் றொரு பக்கம் திடலின் கட்டுமான பணிகள் அனைத்தும் தரமில்லாமல் பல்லிளித்து வருகின்றது.
கேலரியின் படிக்கட்டு விளிம்புகள் உடைந்து நொறுங்கி வருகிறது. பல இடங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து படிக் கட்டின் பினிஷிங் அலங்கோலமாகியுள்ளது. அடுத்து கடைகள் கட்டப்பட்டுள்ள முதல் தளத்திற்கு செல்லும் வழியில் கதவுகள் அமைக்கவில்லை.
மேலும், திடலின் ஒரு பகுதியில் சுற்று சுவர் கட்டப்படாமல் உள்ளது. கழிவறைகள் கட்டும் பணி தற்போது தான் நடந்து வருகிறது.
இப்படி அனைத்து பணிகளும் அரைகுறையாக பாதியில் நிற்க அண்ணா திடலை அவசர அவசரமாக திறக்க ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, அரைகுறை யாக திறக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்போது அண்ணா திடலையும் அவசர அவசரமாக திறந்து எங்களையும் நோகடிக்க வேண்டுமா என விளையாட்டு வீரர்கள் புலம்புகின்றனர்.
பல மாநிலங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி கொண்டு இருக்க, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஸ்மார்ட் சிட்டி நிறுவனமோ, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ஒட்டுமொத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை யும் சுத்தமாக வேஸ்ட் ஆக்கி விட்டது. சாதாரண கொத்தனாரிடம் கொடுத்திருந்தால் கூட, பக்காவாக பிளான் போட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தி இருப்பார்.
தலைமை செயலர் உள்பட இவ்வளவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கண்காணிப்பு இருந்தும் கூட ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அனைவரையும் ஏமாற்றிவிட்டு முழு திட்டத்தையும் செயல்படுத்தாமல் வீணடித்து விட்டது. பிளான் போடுகின்றோம் என்று பல ஆண்டுகளை உருட்டிவிட்டு, சம்பளத்தில் மட்டும் குறியாக இருந்து விட்டனர். மாநில மக்களை பற்றியோ; மாநில வளர்ச்சி பற்றியோ துளியும் கவலைப்படவில்லை.
பல மாநிலங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கின்றன. ஆனால் புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் வாயிலாக, எந்த ஜொலிப்பும் இல்லை. மினுமினுப்பும் இல்லை. இதை நல்லா செய்திருக்காங்கனு உதாரணத்திற்கு ஒன்றை கூட காட்ட முடியவில்லை. அப்படி இருக்கிறது புதுச்சேரியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் லட்சணம்.
புதுச்சேரி அரசு நிதி இல்லாமல் திண்டாடும் நிலையில், மத்திய அரசு கொடுத்த நிதியையும், மாநில அரசு கொடுத்த நிதியையும் சேர்த்து, ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அழகாக நகரை மேம்படுத்தியிருக்கலாம்.
ஆனால் ரூ.1,800 கோடியில் நடக்க வேண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை 620 கோடியில் சுருக்கி மாநிலத்திற்கு எந்த பயனும் இல்லாமல் செய்து விட்டது ஸ்மார்ட் சிட்டி நிறுவனம். இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் புதுச்சேரிக்கு தேவையா என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்ய வேண்டும்.
மேலும்
-
ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளிடம் இந்திய ராணுவம் விளக்கம்
-
இந்தியா தாக்குதலில் சேதமடைந்த பாக்., விமானப்படை தளங்கள்: புதிய படங்கள் வெளியானது
-
ஏர்டெல் சேவை பாதிப்பு: பயனர்கள் அவதி
-
பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு
-
முதுமலை யானைகள் முகாமில் விழா; ரூ.13 கோடி திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
-
தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு