தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு

7

சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக்கும் தமிழக அரசின் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் யுடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.



இந்த திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சவுக்கு சங்கர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சி.பி.ஐ.,யிடம் புகார் மனு அளித்து இருந்தார்.


இந்நிலையில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில்முனைவோர்களாக்கும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல், தூய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள், உபகரணங்கள் வழங்கும் நமேஸ்தே(National Action for Mechanised Sanitation Ecosystem (NAMASTE) ) திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளன.


இந்த திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய பங்கு வகித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்க ஒதுக்கப்பட்ட தொகை உண்மையான பயனாளிகளுக்கு செல்லவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மார்ச் 27 ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு கோடைகால அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநராயணன் முன்பு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement