முதுமலை யானைகள் முகாமில் விழா; ரூ.13 கோடி திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

1

கூடலுார்:முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விழாவில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மாநில முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு கரும்பு வழங்கினார்.



நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானை முகாமில் பணியாற்றி வரும் யானை பாகன்கள், உதவியாளர்களுக்கு, 44 புதிய வீடுகள் கட்ட இரு ஆண்டுகளுக்கு முன்பு, 5.06 கோடி ரூபாய் நிதியை மாநில முதல்வர் ஒதுக்கினார். அந்த வீடுகளை கட்டும் பணிகள் நிறைவு பெற்றது.
அதன் திறப்பு விழா, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நேற்று மாலை நடந்தது. விழாவில் பங்கேற்க முதுமலை வந்த முதல்வர் ஸ்டாலினை, பழங்குடி மக்கள் பாரம்பரியம் இசையுடன நடனமாடி வரவேற்றனர்.

புதிய வீடுகள் திறப்பு


தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், யானை பாகன்களுக்காக கட்டப்பட்ட புதிய வீடுகளை 'ரிமோட்டில்' திறந்து வைத்து, பயனாளிக்கு சாவி வழங்கி வீடுகளை பார்வையிட்டார். வனத்துறை பயன்பாட்டுக்கான, 2.93 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 வாகனங்களை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை மின் கம்பிக்கு மாற்றாக, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கேபிள் (வான் வழி தொகுப்பு கம்பி) மின் திட்டத்தை துவக்கி வைத்து, மரக்கன்று நடவு செய்தார். வளர்ப்பு யானைகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவர் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் யானைகளுக்கு கரும்பு வழங்கினர்.

தொடர்ந்து, தெப்பக்காடு யானைகள் முகாமில், குட்டி யானைகள் அதன் பாகன்கள் இடையேயான பாச பிணைப்பினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண படத்துக்கு, ஆஸ்கார் விருது கிடைத்தது. அதில் இடம்பெற்ற, பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி மற்றும் யானை பாகன்களை சந்தித்து பேசினர். முதுமலையில் மொத்தம், 13 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார்.

முதுமலைக்கு மேலும் பல திட்டங்கள்


முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில்,''சென்னையில் இருந்து வருவதால், இங்கு காலநிலை நன்றாக உள்ளது. முதுமலைக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மேலும் பல திட்டங்களை நிறைவேற்றுவோம்,''என்றார்.

நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, அரசு கொறடா ராமச்சந்திரன், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, முதன்மை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா, முதுமலை கள இயக்குனர் கிருபா சங்கர், துணை இயக்குநர் திவ்யா பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை முடித்து, மசினகுடி வழியாக மீண்டும் ஊட்டிக்கு சென்றார்.

Advertisement